உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், எங்கு சென்றது? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கோவையில் 5 லட்சம் கனமீட்டர் மண் எடுத்தது யார், எங்கு சென்றது? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை:கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட, 5 லட்சம் கன மீட்டர் மண் எங்கு சென்றது, யார் எடுத்தது, பயனாளிகள் யார் என்ற விபரங்களை, தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'கோவை மாவட்டம் ஆலந்துறை, வெள்ளிமலை பட்டினம் உள்ளிட்ட இடங்களில், சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் செம்மண் எடுக்கப்படுகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.சிவா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

விரிவான அறிக்கை

இம்மனுவை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவரத்தி அடங்கிய, சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, கோவை மாவட்ட சட்டப்பணிக்குழு தலைவர் விரிவான அறிக்கை தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நேற்று முன்தினம் சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி, தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.அதில், 'பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட, ஆலந்துறை, இக்கரை போளுவாம்பட்டி, வெள்ளிமலை பட்டினம், தேவராயபுரம், மாதம்பட்டி, தென்கரை ஆகிய கிராமங்களில், 5 லட்சத்து, 48,960 கனமீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டுள்ளது. 'கடந்த, 2023 முதல் 2024 நவம்பர் வரை, 45 சட்டவிரோத குவாரிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இரண்டு ஆண்டுகளில் சட்டவிரோதமாக மண் எடுத்தவர்களுக்கு, 119.78 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சி.மோகன் ஆகியோர், 'இந்த விவகாரத்தில் அறிக்கையில் முழு விபரங்கள் இடம் பெறவில்லை' என்று குற்றம் சாட்டினர்.அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் கூறியதாவது:மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், 'அனுமதிக்கப்பட்ட அளவைவிட, 20 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துள்ளனர். தோராயமாக, 5 லட்சத்து 48,960 கனமீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அளவுக்கு மண் எடுத்துச் செல்ல, குறைந்தபட்சம், 20,000 முறை லாரிகள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். அறிக்கையில் அந்த விபரங்கள் இல்லை. முறையாக புலன் விசாரணை நடத்தப்படவில்லை.

சாலைகளை அழியுங்க

செங்கல் சூளைகளை மூடும்போது, அங்கிருந்த மண், செங்கல்களை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவை பறிமுதல் செய்யப்பட்டதா? எடுக்கப்பட்ட மண் யாருக்கு அனுப்பப்பட்டது; அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதா?தோண்டப்பட்ட குழிகளை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது போன்ற விபரங்களும், அறிக்கையில் இடம் பெறவில்லை. சட்ட விரோத குவாரிகள் விவகாரத்தில், கண்காணிப்பு முறையாக இல்லை. இப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் ஓராண்டுக்கு மேல் பணியில் நீடிக்கவில்லை. இதை பார்க்கும்போது, திட்டமிட்ட செயல் என, தெளிவாக தெரிகிறது. கனிமவளத் துறை அதிகாரிகளின் துணை இல்லாமல், இவ்வளவு மண் எடுத்திருக்க முடியாது.எதிர்காலத்தில், இப்பகுதிகளில் மண் அள்ளும் நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை என்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அத்தகைய செயல்களை தடுக்கவும் நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக மண் எடுத்துச் செல்ல போடப்பட்ட சாலைகள், பாலங்களை உடனே அழிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''சட்டவிரோதமாக மண் எடுத்தது யார்; யார், யாருக்கு மண் கொடுக்கப்பட்டது; பயனாளிகள் யார் என்பன உள்ளிட்ட விபரங்கள், மாவட்ட கலெக்டர் வாயிலாக தாக்கல் செய்யப்படும். ''இந்த விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்காது. எதிர்காலத்தில் சட்டவிரோத மண் எடுப்பதை தடுக்க, தொழில்நுட்ப உதவிகள் நாடப்படும்,'' என்றார்.இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
டிச 13, 2024 08:44

காவல் துறையில் உள்ள குற்றவாளிகளுக்கு அவர்கள் கேட்கும் தொகையை அவ்வப்போது அளித்து மண் கடத்தி செங்கல் தொழில் செய்வது எல்லா இடத்திலும் நடக்கிறது.செங்கல் தொழில் செய்பவர்களிடம் அதற்கான தொகையை ஊராட்சிகள் வசூலிப்பது இல்லை.கள்ள தொழில் செய்பவர்கள் கோடிக் கணக்கில் ணக்கில் காட்டாத பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.


முக்கிய வீடியோ