உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவது யார்? கட்சியினருடன் ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவது யார்? கட்சியினருடன் ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு:'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சி போட்டி, யார் வேட்பாளர் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று கட்சியினருடன் ஆலோசிப்பார்' என, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,கூட்டணியில், ஈரோடு கிழக்கில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா., இரு ஆண்டுகளில் இறந்தார். அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில், திருமகன் ஈ.வெ.ரா.,வின் அப்பா இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும், சில நாட்களுக்கு முன் இறந்தார். அதையடுத்து, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில், டில்லி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்ற தகவல் பரவியதால், அரசியல் கட்சியினர் பலரும், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கத் துவங்கி விட்டனர். இந்நிலையில், இன்று ஈரோட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாளை மதியம், சென்னை செல்கிறார். இந்த, 24 மணி நேர சுற்றுப்பயணத்தில், இடைத்தேர்தல் பற்றிய பேச்சு நடக்க உள்ளதாக, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் கூறியதாவது:கூட்டணி விதிப்படி, இடைத்தேர்தல் என்றாலே, ஏற்கனவே போட்டியிட்ட கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு தருவது வழக்கம். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் பெயர், கடந்த இடைத்தேர்தலின் போதே, 90 சதவீதம் முன்மொழியப்பட்டது. ஆனால், அமைச்சர் முத்துசாமியும், முதல்வர் ஸ்டாலினும் விருப்பப்பட்டு இளங்கோவனை வேட்பாளர் ஆக்கினர். இளங்கோவன் இறந்தத் தொடர்ந்து நடக்கும் இடைத்தேர்தலிலும், இளங்கோவன் குடும்பத்துக்கே போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்று காங்.,கிற்குள்ளேயே பொருமல் எழுந்துள்ளது. இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் தவிர, ஈரோடு மாவட்ட காங்., துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., -ஆர்.எம்.பழனிசாமி போன்றோர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். அதேநேரம், 'தி.மு.க., இம்முறை போட்டியிடலாம் என முடிவெடுத்து, காங்., தலைமையை சமரசம் செய்தால், தி.மு.க., மாவட்ட துணை செயலர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாவட்ட நெசவாளர் அணி செயலர் சச்சிதானந்தம் ஆகியோர் பெயர்கள் தி.மு.க., சார்பிலான பட்டியலில் உள்ளன.ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் முதலியார் சமூகத்தவர், தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ.,ஆக வேண்டும் என விரும்புவதால், அதைக் கணக்கிட்டு, அவ்வினத்தைச் சேர்ந்த செந்தில்குமார், சந்திரகுமார் ஆகிய இருவரில் ஒருவரை முதல்வர் தேர்வு செய்யலாம். இன்று ஈரோடு வரும் முதல்வர் ஸ்டாலின், இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிப்பார் என தெரிகிறது. அதன்பின்பே, தி.மு.க., கூட்டணியில் யார் வேட்பாளர் என்பது முடிவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை