உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாரணாசி பாரதியார் இல்லத்தை கைப்பற்றுவது யார்? தமிழகம், உ.பி., மாநிலங்கள் இடையே போட்டி

வாரணாசி பாரதியார் இல்லத்தை கைப்பற்றுவது யார்? தமிழகம், உ.பி., மாநிலங்கள் இடையே போட்டி

வாரணாசியில், பாரதியார் வாழ்ந்த வீட்டை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றுவதில், தமிழகம், உத்தர பிரதேச மாநில அரசுகள் இடையே போட்டி ஏற்பட்டுஉள்ளது.'மகாகவி' என்று போற்றப்படும் சுப்ரமணிய பாரதியார், தன் வாழ்நாளில், மூன்றாண்டு நான்கு மாதங்களை உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் கழித்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் வசித்த வீடு இன்று சிறப்பு முக்கியத்துவம் பெற்று உள்ளது. அந்த வீடானது, வாரணாசியில் கங்கை நதியின் ஹனுமன் படித்துறை பகுதியில் உள்ளது. இது, பாரதியாரின் அத்தை, அதாவது தந்தையின் சகோதரி குடும்பத்துக்கு சொந்தமானது.

அத்தை வீடு

கடந்த, 1898ல் தந்தை இறந்த நிலையில், 16 வயது சிறுவனாக இருந்த பாரதியாரை அவரது குடும்பத்தினர், வாரணாசியில் உள்ள அத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வாரணாசிக்கு வந்த பாரதியார், அத்தை வீட்டில் தங்கி அருகிலுள்ள ஜெய்நாராயணா பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.இதன்பின், 1899ல் அலகாபாத் பல்கலை நுழைவு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இங்கிருந்த காலத்தில் தான் அவருக்கு, தேசியவாதம் பேசும் தலைவர்களான, பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.அவர்களின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், அவர்களை நினைவு கூறும் வகையில் தலைப்பாகை, கோட், வங்க முறையில் வேட்டி கட்டுதல் போன்றவற்றை, பாரதியார் வழக்கமாக்கினார். பிற்காலத்தில் இதுவே, அவரின் தனி அடையாளமாக மாறியது.இதையடுத்து, 1902ல் எட்டயபுரத்துக்கு பாரதியார் திரும்பினார். இதன்படி, மூன்றாண்டு, நான்கு மாதங்கள் பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீடு தற்போது வரலாற்று சின்னமாக மாறியுள்ளது.தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு செல்வோர், கோவில்களுக்கு அடுத்தபடியாக பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்கு செல்ல தவறுவதில்லை. இதனால், இங்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அரசு நடவடிக்கை

இந்நிலையில், 2022ல் இங்கு பாரதியார் வாழ்ந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகை அடிப்படையில் கேட்டு பெற்று, நினைவு இல்லம் மற்றும் நுாலகத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த நினைவு இல்ல பகுதி, தற்போது தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது.இதற்காக, 18 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்த வீட்டை முழுமையான நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியிலும், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

உ.பி., அரசு நடவடிக்கை

தமிழக அரசு போன்று, உத்தரபிரதேச மாநில அரசும், அந்த வீட்டை விலைக்கு வாங்கி, நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக வீட்டை பெறுவதற்காக, பாரதியாரின் அத்தை வழி வாரிசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.இங்கு முழுமையான நினைவு இல்லம் அமைப்பதில், யார் கை ஓங்கும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.- மோகித் ஐயர்,

பாரதியாரின் அத்தை வழி வாரிசு

நிலம் தர தயக்கம்

பாரதியார் சில ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார் என்ற அடிப்படையில், இந்த இடம் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இந்த இடத்தை அரசுடைமையாக்க நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், தமிழக அரசு வாடகை அடிப்படையில் நினைவு இல்லம் அமைத்துள்ளது.இந்த இடத்தை மொத்தமாக பெற உத்தர பிரதேச மாநில அரசும் பேச்சு நடத்தியது. இதற்கும் நாங்கள் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ