கோவை; ''துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை தி.மு.க., ஆதரிக்காதது ஏன்?'' என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார். கோவையில் அவர் அளித்த பேட்டி: ஆணவக்கொலையை தடுக்க, பிற மாநிலங்களில் சட்டங்கள் இருக்கும்போது, தி.மு.க., அரசு ஏன் சட்டம் கொண்டு வரவில்லை? ஆணவக் கொலையை தடுக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம், தி.மு.க., கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்துங்கள். தமிழகத்தில் ஹிந்துக்களை துளி கூட மதிக்காத முதல்வர் ஸ்டாலின், கேரளாவில் கம்யூ., கட்சியினர் அழைத்ததும், அய்யப்பன் கோவில் விழாவுக்கு புறப்படுகிறார். ஹிந்தியை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு, பீஹாரில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் பாத யாத்திரையில் பங்கேற்க போகிறார். அங்கும், 'ஹிந்தி எதிர்ப்பு' பனியனை அணிந்து கொண்டு செல்லுங்கள். துணை ஜனாதிபதி வேட்பாளராக, ஒரு தமிழரை, பிற மாநிலத்தவர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், 'தமிழ், தமிழ்' என பேசிக்கொண்டே, தமிழன் பிரதமராகக் கூடாது; ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகக்கூடாது என, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். துணை ஜனாதிபதி பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணனை ஏன் ஆதரிக்கவில்லை? தமிழரை எதிர்த்து, ஏன் ஒரு தமிழ் வேட்பாளரை அறிவிக்கவில்லை? தமிழரான ப.சிதம்பரத்தையோ, திருச்சி சிவாவையோ ஏன் நிறுத்தவில்லை? தமிழரை வேட்பாளராக நிறுத்துவதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழரை வேட்பாளராக 'இண்டி' கூட்டணியினர் அறிவிக்கவில்லை. அப்படியென்றால், மம்தாவின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை, 'இண்டி' கூட்டணி தலைவர்கள் குறிப்பாக ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? இவ்வாறு கூறினார்.