-இராம ரவிக்குமார் - 'திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிடப்படுகிறது. ஜாதி மதம் உணவு அடிப்படையில் பாகுபாடு கூடாது. சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் உள்ளன. அழகர் கோவிலில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ஆடு கோழி பலியிடப்படுகிறது. ஒருவரின் மத உரிமையில் மற்றொருவர் தலையிட முடியாது', என்று தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2024 டிச.,4ம் தேதி மதுரை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருப்பரங்குன்றம் அருள்மிகு பழனி ஆண்டவர் கோவில் தெருவில் புதியதாக மலைமேல் உள்ள தர்காவில் கந்துாரி செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ளன என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை தர்கா மேனேஜ்மென்ட் டிரஸ்டியினரால் வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறைக்கு திருப்பரங்குன்றம் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் மேற்படி வாசகம் நீக்கம் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2024 டிச.,5ம் தேதி அன்று சிக்கந்தர் தர்காவில் கந்துாரி கொடுக்க 5 பேர் மலையேற முயன்றபோது காவல் துறையினர் தடுத்ததால் அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாம் சமூகத்தினர் முறையிட்டதன் பேரில் கடந்த 2024 டிச.,31 ம் தேதி அன்று திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.சட்டம் ஒழுங்கு பிரச்னை:''கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள வழிபாட்டு முறைகளை இந்த ஆண்டிலும் தொடர வேண்டும். மேற்படி மலை மீது கந்துாரி கொடுக்கும் நடைமுறை தொடர்பாக போதிய ஆதார ஆவணங்கள் தர்கா நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியோரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் உரிய நீதிமன்றத்தின் மூலமாக பரிகாரம் தேடிக் கொள்ளவும் என சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டது.பலியிட தடைகோரி மனு:இந்த தீர்மானங்களை ஏற்க மறுப்பு தெரிவித்து அசரத் சுல்தான் சிக்கந்தர் பாஷா அவுலியா தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தீர்மானத்தில் கையொப்பம் செய்யாமல் சென்று விட்டனர்.கடந்த 2025 ஜன.,16ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ராம ரவிக்குமார், இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் மற்றும் இந்து தலைவர்கள் சேர்ந்து தர்கா மற்றும இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் சேர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி வெட்டி பலியிட திட்டமிட்டு இருப்பதை நிறுத்திடக்கோரி மனு அளித்தோம்.மீண்டும் 2025 ஜன.,18 அன்று திருப்பரங்குன்றம் ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு பலியிடுவதற்கு அனுமதிக்க கோரி மனு வழங்கினர்.மறுக்கவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் எம்.பி., வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி உடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட பிரச்னை பூதாகரமானது.பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலரும் வருகை தந்தனர்.குன்றம் காக்க குமரன் மலையை காக்ககுன்றம் காக்க குமரன் மலையை காக்க ஒன்றாக வாருங்கள் என்று நீதிமன்ற அனுமதியுடன் குறைந்த நேரத்தில் நடத்தப்பட்ட முருக பக்தர்களின் ஆரப்பாட்டம் பல்லாயிரக்கணக்கில் கூடியது, தமிழக அரசு, அனைத்துக் கட்சியினர் பலரும் ஆச்சர்யப்படும் விதத்தில் அமைந்தது.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில் தொன்மை இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் மலையை பற்றிய முக்கிய குறிப்புகள் அளவிட முடியாத தொன்மையான சான்றுகளையும் திருக்கோவிலில் பணிபுரியும் அலுவலர்கள், ஸ்தானிக பட்டர்கள், பரிசாகர்கள் மற்றும் பலரின் கருத்துருவை சான்றாவணங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளார்கள்.முதல் படைவீடு:முருகனின் முதல் படைவீடு, கைலாய மலைக்கு இணையானது. சிவலிங்க வடிவமாக காட்சியளிக்கும் இந்த மலை, தெற்கு கைலாய மலை. மலை உச்சியில் காசி விசுவநாதர் திருக்கோவில் உள்ளது. இதன் அருகே சுனை உள்ளது. அது பாதாள கங்கை என்று அழைக்கப்படுகிறது.முருகப்பெருமான் திருக்கை வேலால் உண்டாக்கியது. போகர் என்ற சித்தர் இங்கு நீராடி சிவ வழிபாடு செய்ததாகவும், மச்ச முனீஸ்வரர் என்ற சித்தர் சாப விமோசனம் பெற்ற இந்த சுனை தீர்த்தம் மலை மேல் உள்ளது.தெய்வீகச்சிறப்பு மிக்க சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகத்துக்கு பாத்தியப்பட்ட புனிதமான இந்த மலையில் உயிர் பிராணிகள் பலி கொடுத்து எந்த மதத்தினரும் வழிபாடு செய்த வழக்கம் தங்கள் மூதாதையர் காலம் தொட்டு, தங்களுக்கு விவரம் தெரிந்தரவரை பழக்க வழக்கங்கள் இல்லை என்ற விவரத்தை தெரிவித்துள்ளார்கள்.பேஷ்கார் அறிக்கைகாசிக்கு இணையாக இந்த கோவில் உள்ளதால், இந்து மக்கள் புனித தீர்த்தமாக சுனை நீரை எடுத்துச் செல்கிறார்கள். மேற்படி ஸ்தலத்தில் உயிர் பலி கொடுத்தால் கோவிலின் புனிதமும், தீர்த்தத்தின் புனிதத் தன்மையும் கெட்டுப் போய் விடும். மேலும் அசைவ உணவு சாப்பிட்ட எலும்புத்துண்டுகள் மற்றும் எச்சில் இலைகள் மேற்படி தீர்த்தத்தில் விழுந்தால் அதன் புனிதத்தன்மை கெடுவதோடு பக்தர்களின் மனதும் புண்படும்.எனவே, மலை மீது உயிர் பலி கொடுக்க நிர்வாகத்தினர் இதுநாள் வரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், மேற்படி கந்துாரி கொடுப்பது குறித்து இதுநாள் வரை எந்த செய்தித்தாள்களிலும் செய்தி வரப்பெற்ற ஆதாரம் இல்லை எனவும் உண்மையில் கீழே உள்ள முஸ்லிம் பேட்டையில் அவர்கள் ஆடு பலி கொடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்கள் எனவும், கீழே உள்ள பள்ளிவாசல் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபங்களில் ஆடு பலி கொடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்கள் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புரட்டாசி மாதம் மலை மேல் குமாரர் திருவிழாவில் கிராமம் மற்றும் திருக்கோவில் சார்பாக மூலவர் கையில் உள்ள வேலானது வெள்ளிக்கிழமை அன்று பழனியாண்டவர் கோவில் வழியாக உள்ள மலைக்குப் போகும் பாதையில் தான் அனைத்து பக்தர்களும் நடந்து செல்கின்றனர்.தங்க வேலும் இந்த பாதையில் தான் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பாதையில் தான் மற்ற மதத்தினரும் செல்கின்றனர். பழக்க வழக்கத்துக்கு மாறாக, பிராணிகள் உயிர் பலியிடுதல் செய்து கந்துாரி நடத்துவதை இத்திருக்கோவிலின், புனித மலையின் தொன்மை வரலாறு ஆன்மிக சிறப்புக்கள் கருதியும் கந்துாரி நடத்துவதை அனுமதிக்க கூடாது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யம்;இந்த பிரச்னை குறித்து பல நீதிமன்ற வழக்கு விவரங்களையும், உத்தரவு நகல்களையும் திருக்கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.தேர்தல் நேரத்தில் சிறுபான்மை வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக, பெரும்பான்மை இந்து மக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு உரிமைக்கு எதிராக தமிழக அரசு சார்பில், 'சிக்கந்தர் மலை' என்பதற்கு ஆதாரங்களை சூப்பர் முஸ்லிமாக தமிழக அரசு நினைத்துக் கொண்டு தாக்கல் செய்வது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.அரசின் பொருந்தா வாதம்;சிக்கந்தர் மலை என்பதற்கான எல்லா ஆதாரங்களும் இன்று இருப்பதாக சொல்லும் தமிழக அரசு அன்று, மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு வார்த்தையில் எந்த ஆதாரமும் இல்லை என்று முஸ்லிம் தர்கா கமிட்டியார் தெரிவித்ததாக ஏன் சொல்ல வேண்டும்?நீதிமன்றத்தை நாடி உரிய பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள் என்று ஏன் சொல்ல வேண்டும்?மதுரை கள்ளழகர் திருக்கோவில் பதினெட்டாம்படி கருப்பருக்கு ஆடு கோழி பலியிடப்படுகிறது என்று பொருந்தா வாதத்தை தமிழக அரசு முன் வைக்கிறது. ஆடு கோழி பலியிடப்படும் ஒட்டன்சத்திரம் அருகில் இருக்கும் மாம்பாறை முனியப்பன் கோவிலில் எந்த பெண்களும் வர மாட்டார்கள். திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே இருக்கும் வண்டி கருப்பண்ண சாமி கோவிலில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் பெண்களுக்கு அனுமதி. இது தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு தெரியுமா?மடைமாற்றம் செய்ய முயற்சி;ஜாதி மதம் உணவு விஷயத்தில் பாகுபாடு கூடாது என்று தமிழக அரசு இந்து மதம் சார்ந்த விஷயத்தில் இவ்வளவு முனைப்போடு எதிராக செயல்படுவது மதச்சார்பற்ற அரசுக்கு அவசியமானது தானா என்ற கேள்வி எழுகிறது.திருப்பரங்குன்றம் மலையில் இந்து இஸ்லாமிய ஜெயின மதத்தவர்கள் வழிபாடு செய்வதற்கு எந்த விதத்திலும் தடையில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்தும் உணராதது போல் விஷயத்தை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கிறது.திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் மலையடி கருப்பண்ணசாமி பேச்சியம்மன், இருளப்பசாமி, அங்காள ஈஸ்வரி, பத்ரகாளி என பல கோவில்கள் இருக்கிறது. இங்கு இந்துக்கள் ஆடு, கோழிகளை வெட்டி பலியிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.இந்து இஸ்லாம் ஒற்றுமை ஓங்க வேண்டும் என நினைக்கும் தமிழக அரசு, பள்ளிவாசலில் போடப்படும் பிரியாணியை அனைத்து மதத்தவர்களும் சாப்பிடுகிறார்கள் என்று தர்கா நிர்வாகத்தினர் கூறுவது போல, 'மேலே குறிப்பிட்ட திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள இந்து கோவில்களில் ஆடு பலியிட்டு பிரியாணி சமைத்து சாப்பிட்டால் எந்த இந்துவும் இஸ்லாமியர்களை எதிர்ப்பு தெரிவிக்கப் போவது கிடையாது.இதற்கு தமிழக அரசு இஸ்லாமிய மதத்தவர்கள் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் ஆடு கெடா வெட்டி பலியிடுவது போல, திருப்பரங்குன்றத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை வழங்கி மத நல்லிணக்கம் ஏற்பட வழி வகை செய்யலாமே?அதிருப்தி: சமீபத்தில் திருநள்ளாறு சம்பந்தமான வழக்கில் மாண்புமிகு நீதியரசர் வி.லட்சுமி நாராயணன், புதுச்சேரி அரசு மதம் சார்ந்த விஷயங்களில் நிறைய தலையீடு செய்கிறீர்கள்.கோவில் உள்துறை நிர்வாகத்தில் தலையிட்ட மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. நீங்கள் காரைக்கால் மசூதி விஷயத்திலும் இந்த மாதிரி தான் தலையீடு செய்தீர்கள். எந்த மதத்தவரையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார்கள்.பிரச்னை:மேலும் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்துறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்தால் அவர் ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்கள்.மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமிய மத தொழுகைக்கு எந்த விதமான தடையும் இல்லாதபோது அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் ஆடு கோழி வெட்டுகிறோம் என்று பிரச்னையை தொடங்கியவர்கள் தர்கா கமிட்டியார்.எந்த மதத்தினரும் ஆடு கோழி பலியிட்டு வழிபடும் மரபு மலையில் கிடையாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில் நிர்வாகம். ஆனால் தமிழக அரசின் வருவாய்த்துறை மாவட்ட ஆட்சியர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள தீபத்துாரில் தீபம் ஏற்ற தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை போன்றவர்கள் தயக்கம் காட்டியும் நீதிமன்ற உத்தரவை அவமதித்து நடப்பது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்ற கேள்வி எழுகிறது.தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும் என்பது மத நல்லிணக்கத்தை விரும்பும் இந்து, இஸ்லாமிய மதத்தவர்கள், நல்லெண்ணம் கொண்ட பலரின் விருப்பமாகும்.-கட்டுரையாளர், இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர்.