உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகன் வழக்கு சென்னைக்கு மாற்றம் ஏன்? போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி

துரைமுருகன் வழக்கு சென்னைக்கு மாற்றம் ஏன்? போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை, வேலுார் நீதிமன்றத்தில் இருந்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்' என்று, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், கடந்த 2006 -- 11ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் துரைமுருகன். 2007- - 2009ம் ஆண்டு காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 1.40 கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிரான வழக்கில் இருந்து, இருவரையும் விடுவித்து, வேலுார் சிறப்பு நீதிமன்றம், 2017, ஜனவரியில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவியை விடுவித்த, வேலுார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதங்களில் முடிக்கும்படி உத்தரவிட்டது.அதன்படி, இந்த வழக்கை, சென்னை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. அப்போது, 'கடந்த 2024ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை, வேலுார் சிறப்பு நீதிமன்றத்துக்கே மாற்ற வேண்டும்' என, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துரைமுருகன் தரப்பில், 'சொத்து குவிப்பு வழக்கில், எங்களை விடுவித்ததை எதிர்த்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், இந்த மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை நவ., 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், 'வேலுாரில் இருந்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது ஏன்' என, விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி