துாத்துக்குடி:'தமிழகத்துக்கு பிரதமர் மோடி, தற்போது தந்துள்ள, 4800 கோடி ரூபாய் திட்டத்தை, வீடு வீடாகச் சென்று தி.மு.க.,வினர் சொல்வார்களா', என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். அவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கு மத்திய பா.ஜ., அரசு எதுவுமே செய்யவில்லை என வீடு, வீடாகச் சென்று சொல்லுங்கள் என தி.மு.க.,வினரிடம் முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். பிரதமர் மோடியின், தற்போதைய வருகையில் மட்டும், தமிழகத்துக்கு 4800 கோடி ரூபாய் திட்டப் பணிகளை வழங்கி இருக்கிறார். இதை வீடு, வீடாகச் சென்று தி.மு.க.,வினர் சொல்வார்களா? பிரதமர் மோடி, எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தமிழகத்திற்கு திட்டங்களை கொடுக்கிறார். ஆனால், 'உங்களுடன் ஸ்டாலின்' என தி.மு.க.,வினர் மக்களை ஏமாற்றுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், ஊர் ஊராக சென்று மக்களிடம் ஸ்டாலின் வாங்கிய 14 லட்சம் மனுக்கள், பெட்டிக்குள் துாங்குகின்றன. அதுபோலவே, இந்த மனுக்களும் துாங்கும். தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை; கவலைக்கிடமாக தமிழகம் உள்ளது. அதைக் காப்பாற்றவே பிரதமர் மோடி வருகிறார். இனிமேல், ஆன்மிக தமிழ்தான் ஓங்கும். காவித் தமிழ்தான் தமிழகத்தில் எழுதப்படும். தமிழகத்தில் சுகாதாரத் துறை மிகச் சிறப்பாக இருப்பதாக அந்த துறையின் அமைச்சர் தினமும் கூறுகிறார். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருக்கிறது என்றால் அவர் அங்கே சென்று சிகிச்சை பெறாதது ஏன்? மக்களுக்கு ஒரு சிகிச்சை, முதல்வருக்கு ஒரு சிகிச்சையா என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.