பொங்கல் பரிசு வினியோக பணி கார்டுக்கு ரூ.5 கிடைக்குமா?
சென்னை:பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு, ஒரு ரேஷன் கார்டுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குமாறு தமிழக அரசுக்கு, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதற்காக, ஒரு கார்டுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால், 50 காசு வழங்க அரசு உத்தரவிட்டது. இதை, பல கூட்டுறவு சங்கங்கள், மூன்று மாதங்களுக்கு மேல் தாமதமாகத்தான் வழங்கின.இந்த, 50 காசு ஊக்கத்தொகை என்பது, 2018ல் அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக கார்டுதாரர்களின் வீடுகளில், 'டோக்கன்' வழங்குவது, கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்குவது போன்ற பணிகளுக்காக, ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, இந்தாண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு கார்டுக்கு குறைந்தது, 2 ரூபாய் முதல், 5 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.அந்த தொகையையும் இம்மாதமே வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.