உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சூரியசக்தி மின் நிலையம் விண்ணப்பங்கள் நிராகரிப்பா?

 சூரியசக்தி மின் நிலையம் விண்ணப்பங்கள் நிராகரிப்பா?

சென்னை: தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க கோரும் விண்ணப்பங்களை, மின் வாரியம் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. நாட்டில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, தமிழகத்தில் சாதகமான சூழல் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 10,300 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களும், 9,424 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களும் உள்ளன. இந்நிலையில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் விண்ணப்பங்களை, அதிகாரிகள் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பல்வேறு முதலீட்டாளர்கள் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, பசுமை எரிசக்தி கழகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளனர். பல விண்ணப்பங்கள் காரணம் கூறாமல் நிராகரிக்கப்படுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், 'உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல போதிய மின் வழித்தட வசதிகளும், துணை மின் நிலையங்களில் மின்சாரத்தை இணைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளும் இல்லாததே காரணம்' என, கூறுகின்றனர். குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், சூரியசக்தி மின் நிலையத்தை அமைக்க, அரசே நிலத்தை மேம்படுத்தி, குறைந்த விலைக்கு வழங்குகிறது. விரைவாக அனுமதியும் அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், முதலீட்டாளர்கள் எப்படி முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவர்? இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எந்த ஒரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படுவதில்லை. மின் நிலையம் அமைக்க கோரும் இடத்தில், மின் வழித்தட கட்டமைப்பு வசதி குறைவாக இருக்கும்பட்சத்தில், கூடுதல் வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி