உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு தாளம் தட்டினால் சட்டசபையில் முதல் வரிசையா? அன்புமணி கொந்தளிப்பு

தி.மு.க.,வுக்கு தாளம் தட்டினால் சட்டசபையில் முதல் வரிசையா? அன்புமணி கொந்தளிப்பு

சென்னை: 'இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில், சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பா.ம.க.,வுக்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், கடந்த ஜூலை 3ம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பா.ம.க., சட்டசபை குழு தலைவர் ஜி.கே.மணி நீக்கப்பட்டு, தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரனும், கொறடாவாக மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, சபாநாயகர் அப்பாவுவுக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், 100 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டசபையில இப்பிரச்னையை எழுப்பியபோது, 'சட்டசபையின் மொத்த எண்ணிக்கையில், 10 சதவீதம் அதாவது, 24 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள கட்சிகளை மட்டும் தான் அங்கீகரிக்க முடியும். தலைவர் உள்ளிட்ட பதவிகளை அங்கீகரிக்க முடியும்' என, சபாநாயகர் கூறியுள்ளார். அப்படியெனில், பா.ம.க.,வை விட குறைவான எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கு, எப்படி முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது? எல்லா கட்சிகளுக்கும் ஒரு நீதி, பா.ம.க.,வுக்கு மட்டும் தனி நீதியா? அல்லது ஆளும்கட்சிக்கு தாளம் தட்டுவோருக்கு முன்வரிசை அளிப்பது தான் சபாநாயகர் உருவாக்கிய புதிய விதியா? தமக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக, சபாநாயகர் அப்பாவு கூறிக்கொள்கிறார். இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில், முதல்வர், சபாநாயகர் என, யாருக்கும் வானளாவிய அதிகாரம் கிடையாது; அப்படி சொன்னால் அது கற்பனை தான். ஜனநாயகம் தான் அனைத்துக்கும் அடிப்படை என்பதை, சபாநாயகர் உணர வேண்டும். அறத்தின்படி செயல்பட்டு, பா.ம.க., சட்டசபை குழு தலைவராக வெங்கடேஸ்வரனை அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ