பரிந்துரைகளையாவது அரசு செயல்படுத்துமா; 6 விசாரணை கமிஷன்கள் 14 ஆண்டுகளில் அமைப்பு
மதுரை : தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் 5 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்ட நிலையில், கரூர் சம்பவம் குறித்து அமைக்கப்பட்டது 6வது விசாரணை கமிஷன். இந்த கமிஷனின் பரிந்துரைகளையாவது அரசு செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை, பெரும் உயிரிழப்புகளின்போது உண்மை தன்மையை அறியவும், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 செப்.,11ல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி சம்பத் தலைமையிலும், 2013 ஜூலை 4ல் தர்மபுரி இளவரசன் ஆணவக்கொலை குறித்து நீதிபதி சிங்காரவேலு தலைமையிலும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து நீதிபதி ராஜேஸ்வரன், 2018 மே 22ல் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் மட்டும் 4 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன. இதில் ஜல்லிக்கட்டு, துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை கமிஷன் அறிக்கைகள் தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டன. தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்புகள் குறித்து நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, பின்னர் சி.பி.ஐ.,யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இச்சூழலில்தான் செப்.,27ல் கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இதுகுறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 14 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட நீதி விசாரணை கமிஷன்களின் பரிந்துரைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரூர் சம்பவம் குறித்தாவது விசாரணை கமிஷன் பரிந்துரைகளை அரசு கிடப்பில் போடாமல் செயல்படுத்த வேண்டும். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நேற்றுமுன்தினம்கூட முதல்வர் அறிக்கை வெளியிட்டார். அதில், கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு விசாரணை கமிஷன் பரிந்துரைகளை அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். தேர்தல் நெருங்குவதால் நிச்சயம் அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றும் எனத்தெரிகிறது'' என்றார்.