உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சனிக்கிழமை விடுமுறை கிடைக்குமா? சார் - பதிவாளர்கள் காத்திருப்பு

 சனிக்கிழமை விடுமுறை கிடைக்குமா? சார் - பதிவாளர்கள் காத்திருப்பு

சென்னை: 'தமிழகத்தில், 100 சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு, சனிக்கிழமை விடுமுறை விடப்படும்' என, அரசு அறிவித்தாலும், அதற்கான உத்தரவு வராதது சார் - பதிவாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்படும் என, கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் வார நாட்களில் விடுமுறை எடுக்காமல், சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்ய வசதியாக இருந்தது. இவ்வாறு சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகத்தின் பணியாளர்கள், வார நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், பணியாளர்கள் வார நாட்களில் விடுப்பு எடுப்பதில்லை. இந்நிலையில், சனிக்கிழமையன்று சார் பதிவாளர் - அலுவலகங்கள் திறப்பதை கைவிட வேண்டும் என, பதிவுத்துறையை சேர்ந்த பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: 'ஸ்டார் 3.0' மென்பொருள் அறிமுகத்தால், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான நேரத்தில், பத்திரங்களை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில், நேரடி வருகையில்லா பத்திரப்பதிவு அமலுக்கு வந்துள்ளது. சனிக்கிழமைகளில் செயல்படும் சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு, இனி விடுமுறை அளிக்கப்படும் என, பதிவுத்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அறிவிப்பு வெளியாகி, மூன்று வாரமாகியும், நிர்வாக ரீதியான உத்தரவு வரவில்லை. இதனால், 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமைகளில் தொடர்ந்து செயல்படுகின்றன. ஐ.ஜி., உத்தரவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி