தக்காளி, வெங்காயம் விலை உயர்வு கூட்டுறவு கடைகளில் விற்கப்படுமா?
சென்னை:வெளிச்சந்தையில் கிலோ தக்காளி, பெரிய வெங்காயம் விலை தலா, 70 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, கூட்டுறவு காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி, வெங்காயம் விற்குமாறு, அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு பண்டகசாலைகளும், கூட்டுறவு சங்கங்களும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளை நடத்தி வருகின்றன. அவற்றில் சில முக்கிய காய்கறிகள், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.தமிழகத்தில் பெரிய வெங்காயம் தேவை அதிகம் உள்ள நிலையில், விளைச்சல் மிகவும் குறைவு. மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு தினமும் வெங்காயம் வருகிறது. மேற்கண்ட மாநிலங்களில் பெய்த கன மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழக சந்தைகளில், கிலோ பெரிய வெங்காயம், 70 - 80 ரூபாய்க்கு தற்போது விற்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி சாகுபடி நடக்கிறது. இதுதவிர, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வருகிறது. விளைச்சல் பாதிப்பால் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இதனால், சில தினங்களுக்கு முன், கிலோ 40 ரூபாய்க்கு கீழ் விற்ற தக்காளி நேற்று 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.மத்திய அரசு, தேசிய கூட்டுறவு அமைப்பு வாயிலாகவும், நடமாடும் வேன்கள் வாயிலாகவும் மக்கள் கூடும் இடங்களில், கிலோ பெரிய வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்கிறது. அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில், கூட்டுறவு காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம், தக்காளி விற்குமாறு அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.