உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலில் விழுந்து விஜய் மன்னிப்பா?

காலில் விழுந்து விஜய் மன்னிப்பா?

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க., தலைவர் விஜய் நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விஜய் கூட்டத்துக்கு சென்ற மனைவி ஹேமலதா, மகள்கள் சாய் லக்சனா, சாய் ஜீவா ஆகியோரை இழந்த, கரூர் தான்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஆனந்த ஜோதி, 38, கூறியதாவது: நடிகர் விஜய் என்னை சந்தித்தபோது, 'உங்களை கரூரில் சந்தித்து இருக்க வேண்டும். ஆனால், போலீஸ் பாதுகாப்பு மற்றும் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்துக்கு உங்களை வரவழைத்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்' என்றார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசும்போது, விஜய் பல தடவை கண்ணீர் சிந்தினார். பலமுறை ஸாரி சொன்னார். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு உதவுவதாக கூறினார். குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் உறுதி அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனந்த ஜோதியின் தாய் கிருஷ்ணவேணி, 59, கூறியதாவது:

விஜய் தனி அறையில் இருந்தார். என் கையை பிடித்துக்கொண்டு விஜய் அழுதார்; பின், என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனாலும், விஜய் மீது எங்களுக்கு வருத்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கரூர் தான்தோன்றிமலை ஏமூர்புதுாரைச் சேர்ந்த சக்திவேல், 43, என்பவரின் மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகா ஆகிய இருவரும், த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்தனர்.

மனைவி, மகளை இழந்த சக்திவேல், மாமல்ல புரத்தில் விஜயை சந்தித்தது குறித்து கூறியதாவது:

குடும்பத்தினருக்கு என்னென்ன உதவிகள் தேவை என கேட்டு குறித்து கொண்டார். விரைவில், கரூருக்கு வருவதாக சொன்னார். சினிமாவில் பார்த்த கம்பீர விஜயை, மாமல்லபுரத்தில் பார்க்க முடியவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்ததை உணர்ந்து கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை