காற்றாலை மின்சாரம்: 95.80 கோடி யூனிட் குறைவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள், சொந்த மின் பயன்பாட்டிற்கும், மின் வாரியத்திற்கு விற்கவும், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. மாநில மின் பகிர்ந்தளிப்பு மைய கணக்கின்படி தற்போது, 9,150 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். எனினும், ஏப்ரலில் இருந்தே காற்றாலை மின்சாரம் கிடைக்கிறது. நடப்பு சீசனில் காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, 8 - 9 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. முந்தைய சீசனுடன் ஒப்பிடும் போது, நடப்பு சீசனில் காற்றின் வேகம் குறைவாக இருந்தது. இதனால், இந்த சீசனில் அதிக மின்சாரம் கிடைக்கவில்லை. கடந்த ஏப்., 1 முதல் செப்., 30 வரை காற்றாலைகளில் இருந்து, 963.20 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. இது, 2023 ஏப்., 1 முதல் செப்., 30 வரையிலான காலத்தில், 1,059 கோடி யூனிட்களாக இருந்தது. எனவே, கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, நடப்பு சீசனில் காற்றாலை மின்சாரம், 95.80 கோடி யூனிட் குறைந்துள்ளது. காற்றாலைகளில் இருந்து, 2022 ஜூலை 9ல், 12.02 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது. இதுவே காற்றாலைகளில் கிடைத்த அதிக அளவு.