உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குளியலறைகளில் கண்காணிப்பு கேமரா வைத்த பெண் கைது; நண்பருக்கு வலை உண்மையை மறைக்க போலீசார் முயற்சியா?

குளியலறைகளில் கண்காணிப்பு கேமரா வைத்த பெண் கைது; நண்பருக்கு வலை உண்மையை மறைக்க போலீசார் முயற்சியா?

ராயக்கோட்டை: பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதியில், குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது ஆண் நண்பரை, போலீசார் தேடுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் , ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில், 'ஐபோன்' உதிரி பாகங்களை தயாரிக்கும் ' டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம் இயங்குகிறது. இங்கு பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக, உத்தனப்பள்ளி அருகே, 'விடியல் ரெசிடென்சி' என்ற பெயரில், நிறுவனத்தின் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு, 11 மாடிகளுடன், 11 அடுக்கு மாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் தற்போது, ஒன்பது கட்டடங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதில், ஒரு அறைக்கு, நான்கு பேர் வீதம் மொத்தம், 6,250 தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

32 ரகசிய கேமராக்கள்?

இதிலுள்ள, 4வது பிளாக்கில், எட்டாவது மாடியின் ஒரு குளியல் அறையில், ரகசிய கேமரா இருப்பதை, 23 வயதான வட மாநில பெண் தொழிலாளி ஒருவர் நேற்றுமுன்தினம் பார்த்தார். இதை அவர் மற்ற பெண்களுக்கு தெரிவிக்கவே, 2,500க்கும் மேற்பட்ட வட மாநில மற்றும் தமிழக பெண் தொழிலாளர்கள், விடுதி முன் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி முதல், நேற்று அதிகாலை, 3:30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரகசிய கேமரா வைத்தது, அந்த விடுதியில் தங்கி, 2022 முதல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, நீலுகுமாரி குப்தா, 23, என தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர். மேலும், அவருடன் நெருங்கி பழகி வந்த ஆண் நண்பரான, பெங்களூருவை சேர்ந்த பொக்லைன் டிரைவர் சந்தோஷ், ரகசிய கேமராக்களை நீலுகுமாரி குப்தாவிடம் கொடுத்து, அதை குளியலறைகளில் வைத்து, வீடியோ எடுக்க வைத்துள்ளார். அவரை உத்தனப்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர். விடுதி குடியிருப்புகளில் மொத்தம், 32 ரகசிய கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான நீலுகுமாரி குப்தா, மற்ற பெண்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று, சர்வ சாதாரணமாக ரகசிய கேமராவை வைத்துள்ளார். தங்கள் அறைகளிலும் கேமரா வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தால், விடுதியில் தங்கியிருந்த, 200க்கும் மேற்பட்ட தமிழக பெண் தொழிலாளர்கள், விடுமுறை எடுத்து ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

மூடி மறைப்பு

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விடாமல் தடுக்க, முழு உண்மையையும் போலீசார் வெளியே கூறாமல் மறைப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை