கரூர்: கரூர் தொகுதியில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, காங்., - எம்.பி., ஜோதிமணி சென்றபோது, கேள்வி கேட்ட பெண்களிடம், 'ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்து ஆளை அனுப்புறாங்க...' என, பேசியதால், கொந்தளித்த பெண்கள், ஜோதிமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 1.66 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேள்வி கேட்டனர்
ஏழு மாதங்களுக்கு பின், தற்போது கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். கரூர் தொகுதிக்குட்பட்ட கோடங்கிபட்டியில், நன்றி தெரிவிக்க நேற்று சென்றபோது, அவரிடம் பெண்கள் கேள்வி கேட்டனர்.கடந்த ஆண்டு, மார்ச் 28ல் கரூர் அருகில் கோடங்கிபட்டியில் பிரசாரத்தை துவங்கியபோது, ஆரத்தி எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த பெண்கள், 'ஐந்து ஆண்டுகளாக உங்களை பார்க்கவில்லை.இப்போது ஓட்டு கேட்க மட்டும் வந்திருக்கிறீர்களே' என்று கேள்வி எழுப்பினர். இதனால், இம்முறை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை எம்.பி.,ஜோதிமணி, கோடங்கிபட்டியில் முன் கூட்டியே துவங்கினார். அப்போது, ஆரத்தி எடுக்க நின்று கொண்டிந்த பெண்கள், 'ஓட்டு கேட்க வந்தபோது, கோடங்கிபட்டியில் பாலம் கட்ட இடத்தை அளந்து சென்று விட்டதாக கூறியதோடு, விரைவில் பாலம் கட்டப்படும் என்றும் சொன்னீர்கள். அதன்பின், எதுவும் செய்யவில்லை. அங்கு நடந்த விபத்தில் எத்தனையோ உயிர்கள் போய்விட்டன' என்றனர். வாக்குவாதம்
அதற்கு ஜோதிமணி, 'ஓட்டு கேட்க வந்த போதும் இப்படித்தான் கேள்வி கேட்டீங்க; ஒவ்வொரு முறையும் ஒரே ஆளை, 'செட்டப்' பண்ணி பேச வைக்கின்றனர். 'அடையாளத்தை மாற்றியாவது பேச வையுங்கள். பணம் கொடுத்து ஆளை அனுப்பி, இதே கேள்வியை கேட்க வைக்கின்றனர். பணத்துக்காக இப்படியெல்லாம் நாகரிகமில்லாமல் நடந்து கொள்ளக்கூடாது' என்றார். இதையடுத்து, அங்கு கூடியிருந்த பெண்கள், ஜோதிமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.'இன்னும் ஒரு மாதத்தில் கோடங்கிபட்டி பகுதியில் மேம்பாலம் கட்ட ஏற்பாடு செய்கிறேன்' என, எம்.பி., ஜோதிமணி மீண்டும் வாக்குறுதி கொடுத்து விட்டு கிளம்பினார்.
அக்கா கணவர் சொந்தமில்லையா?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் அக்கா கணவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 13 கோடி ரூபாயை கைப்பற்றி, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல். அது குறித்து அண்ணாமலையிடம் கேட்டால், 'கரூரைச் சேர்ந்த ஜோதிமணி, செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் எனக்கு சொந்தம்' என்கிறார். அண்ணாமலைக்கு அவரது அக்கா கணவர் சிவகுமார் சொந்தம் இல்லையா? மேலும், அமலாக்கத்துறை வழி தவறி அங்கே போயிருக்கலாம். அந்த வழக்கு எப்படி நடக்கிறது என்பதை பொறுத்துதான், அது குறித்து பேச முடியும். பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது.ஜோதிமணி, காங்., - எம்.பி.,