விழுப்புரம்: 'புயல் நிவாரணம் குறித்து கேட்டால் வேளாண் துறையில் முறையான பதில் இல்லை. உங்களுக்கு எல்லாம் ஒரு மாதம் சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா?' என, குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகங்களுக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலருக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கவில்லை. இதேபோன்று, பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.நிவாரணம் குறித்து கேட்டால், 'வேளாண் துறையில் கேளுங்கள்; வருவாய்த் துறையில் கேளுங்கள்' என மாறி மாறி கூறுகின்றனர். விவசாயிகள் வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது. பயிர் சேதத்தால் விவசாயிகள் கண்கலங்கி, மனக்குமுறலில் உள்ளோம். அரசு ஊழியர்களான உங்களுக்கு எல்லாம் ஒரு மாதம் சம்பளம் இல்லையென்றால், நீங்கள் வேலைக்கு வருவீர்களா?புயல் நிவாரணத் தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தை நடத்த விடமாட்டோம். இவ்வாறு வேளாண் துறை அலுவலர்களிடம், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதற்கு பதில் அளித்த அலுவலர்கள், 'வங்கியில் ஐ.எப்.எஸ்.சி., கோடு பிழையால் சிலருக்கு நிவாரணத் தொகை வழங்காமல் தாமதம் ஏற்பட்டது. தற்போது அவை சரிசெய்யப்பட்டு, நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர். தொடர்ந்து பேசிய ஆர்.டி.ஓ., முருகேசன், ''விவசாயிகள் கோரிக்கைகள் மீது அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.