உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சோமாலியாவின் 2 மண்டலங்களில் பஞ்சம் பாதிப்பு ; ஜ.நா., அறிவிப்பு

சோமாலியாவின் 2 மண்டலங்களில் பஞ்சம் பாதிப்பு ; ஜ.நா., அறிவிப்பு

ஐ.நா. : வறட்சியின் பிடியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியுள்ள, சோமாலிய நாட்டின் சில பகுதிகளை பஞ்சத்திற்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்க ஐ.நா., முடிவு செய்துள்ளது. சோமாலியா நாடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு, உணவு இல்லாமல், அந்நாட்டு மக்கள் குழந்தைகளுடன், லட்சக்கணக்கில், அருகில் இருக்கும் கென்யா மற்றும் எத்தியோப்பியா நாட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். முகாம்களுக்கு செல்லும் வழியில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பெண்கள், குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இவர்களுக்கு, ஐ.நா., மற்றும் பிரிட்டன் நேசக் கரம் நீட்டியுள்ளன.

இந்நிலையில், 'சோமாலியா நாட்டிற்குள்ளேயே இப்பிரச்னையை தீர்க்க வேண்டும்' என்று ஐ.நா., கேட்டுக் கொண்டது. இதையடுத்து, 2009ம் ஆண்டில், 'சோமாலியா நாட்டிற்கு எந்த உதவிகளும் செய்யக் கூடாது' என்று விடுத்திருந்த உத்தரவை, அல்- குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு, சமீபத்தில் வாபஸ் பெற்றது. இந்நிலையில், சோமாலியா நாட்டிற்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

கிழக்கு ஆப்ரிக்காவில் மட்டும் ஒரு கோடி மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்நாட்டின் மத்தியில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள, பாகூல் மற்றும் லோவர் ஷபெல்லா ஆகிய இரண்டு மண்டலங்களை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவைகளாக, விரைவில் அறிவிக்க ஐ.நா., முடிவு செய்துள்ளது.

இந்நாட்டில், தினமும் பத்தாயிரம் குழந்தைகளில் நான்கு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்க நேரிடுகின்றன. இக்குறைபாட்டால், 30 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகில், ஒவ்வொரு முறையும், பஞ்சம் பற்றி அறிவிப்பதில் ஐ.நா., மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறது. 1992ம் ஆண்டுக்குப் பின்னர், தற்போது சோமாலியாவை அறிவிக்க ஐ.நா., முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, ஆப்ரிக்க விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி அமைச்சர் ஜான்னி கார்சன் கூறுகையில், 'அல் ஷபாப் தீவிரவாத அமைப்பிடம் உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது அமெரிக்க உதவிப் பொருட்களின் மீது வரி விதிக்குமா என்பதை அமெரிக்கா கவனித்து வருகிறது' என்றார்.

இதற்கிடையே, பணம், செல்போன் தருவதாகக் கூறி, சோமாலிய நாட்டு குழந்தைகளை தங்களது தீவிரவாத அமைப்பில் அல் ஷபாப் தீவிரவாதிகள் சேர்த்து வருவதாக, சர்வதேச அரசியல் பொது மன்னிப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை