மெல்போர்ன் ;பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலை கிராமம் மண்ணுக்குள் புதைந்தது. இந்த விபத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க, சர்வதேச நாடுகளின் உதவிகளை அந்நாட்டு அரசு நாடியுள்ளது.தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா மாகாணத்தில் கடந்த 24ம் தேதி கனமழை பெய்தது.இதையடுத்து, அங்குள்ள மலை கிராமமான எம்பாலியில் அதிகாலை நேரத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலை துண்டிப்பு
கிராம மக்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் பாறைகளும், மரங்களும் அடியோடு பெயர்ந்து கிராமத்தில் இருந்த குடியிருப்புகள் மீது விழுந்தன. இதன் காரணமாக அக்கிராமத்துக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், பெரிய பாறைகள், மரங்கள் வீடுகள் மீது விழுந்ததால் மீட்புப் பணிகள் சிக்கலாகி உள்ளன. ஹெலிகாப்டர் வாயிலாக மட்டுமே விபத்து நடந்த பகுதியை அணுகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.இதுதவிர, பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் அங்கு மீட்புப்பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் நீடிக்கிறது. 20 முதல் 26 அடி ஆழம் வரை இடிபாடுகள் மலைப்போல் குவிந்துள்ள நிலையிலும், அங்கு சிக்கியவர்களை, உள்ளூர்வாசிகள் மீட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலச்சரிவில், 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்திருக்கக்கூடும் எனவும், அவர்களை மீட்க, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை எனவும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடிதம்
இதுதொடர்பாக பப்புவா நியு கினினியாவின் தேசிய பேரிடர் மையத்தின் செயல் இயக்குனர், ஐ.நா., சபைக்கு கடிதம் எழுதியுள்ளார்.இக்கடிதத்தில் அவர், 'பப்புவா நியு கினியாவில், மிகப்பெரிய பேரிடர் அரங்கேறி உள்ளது. 2,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, நிலச்சரிவில் சிக்கியுள்ள அவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே அந்நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்று, ஆஸ்திரேலிய அரசு தங்கள் நாட்டின் விமானப்படைகளை மீட்புப்பணிக்காக அனுப்ப முடிவு செய்துள்ளது. முன்னதாக, ஐ.நா., சபை வெளியிட்ட தகவலின்படி பப்புவா நியு கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி 2,000க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில் அவர்களின் நிலை என்னானது என்பது பற்றி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.