ஜப்பானில் நிலநடுக்க அச்சம்; அரிசி கிடைக்காமல் அவதி; அரசுக்கு வந்தது தலைவலி
டோக்கியோ: ஜப்பானில் இதுவரை இல்லாத அளவிற்கு அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது.நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி ஆகியவற்றால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகும் நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. தற்போது அங்கு உணவு தானிய பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அங்கு உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாடு, அரசுக்கும், மக்களுக்கும் பெரும் தலைவலியாக மாறி உள்ளது.தட்டுப்பாடு
வரும் சில நாட்களில் நிலநடுக்கம் மற்றும் சூறாவளி ஏற்படும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வேகமாக பரவின. இதனால் அச்சம் அடைந்த மக்கள் அனைவரும் வீட்டில் அரிசியை வாங்கி குவித்து வைத்திருப்பதும் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாக மாறிவிட்டது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது அரிசி தட்டுப்பாட்டிற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.அமைதியாக இருங்கள்
இது தொடர்பாக, ஜப்பான் விவசாயத்துறை அமைச்சர் டெட்சுஷி சகாமோடா கூறியதாவது: அரிசி பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீதம் அறுவடை பணி நடைபெறும். புதிய அறுவடை காலம் வந்துவிட்டால் பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்றார்.