உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சி வங்கதேசத்தில் முன்னாள் நீதிபதி கைது

இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சி வங்கதேசத்தில் முன்னாள் நீதிபதி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா : இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லைப் பகுதி வழியாக, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சாம்சுதின் சவுத்ரி மாணிக்கை, அந்நாட்டு எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.வன்முறையாக மாறிய இந்தப் போராட்டத்தில், மாணவர்கள், போலீசார் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.வங்கதேசத்தில் தற்போது, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், இடைக்கால அரசு ஆட்சி நடக்கிறது. கடந்த 5ம் தேதி முதல், அவாமி லீக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். சட்டத் துறை முன்னாள் அமைச்சர் அனிசுல் ஹுக், முன்னாள் பிரதமரின் ஆலோசகர் சல்மான் ரஹ்மான் ஆகியோர், டாக்காவில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதி வழியாக, நேற்று முன்தினம் இரவு, இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சாம்சுதின் சவுத்ரி மாணிக்கை, அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள கனைகத் எல்லைப் பகுதி வழியாக, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, அவர் கைது செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மேலும், எல்லையில் கைது செய்யப்பட்ட அவர், இரவு முழுக்க அங்குள்ள நிலையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஹசீனா பாஸ்போர்ட் ரத்து

ஷேக் ஹசீனாவின் அனைத்து துாதரக பாஸ்போர்ட்களை, வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்தது. ஷேக் ஹசீனாவின் துாதரக பாஸ்போர்ட் உட்பட அவரது அமைச்சரவையில் இருந்த முன்னாள் எம்.பி.க்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.தற்போதைய, இந்திய விசா ஒப்பந்தத்தின்படி, வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் அதிகபட்சம் 45 நாட்கள் வரை எந்த விசாவும் இன்றி, நம் நாட்டில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது ஷேக் ஹசீனா, நம் நாட்டிற்கு வந்து இன்றுடன் 19 நாட்கள் ஆகிறது. ஹசீனாவிடம், துாதரக பாஸ்போர்ட் தவிர வேறு எந்த பாஸ்போர்ட்டும் இல்லாத நிலையில், தற்போது புதிய பாஸ்போர்ட் பெற அவர் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, ஷேக் ஹசீனா மீது 42 கொலை வழக்குகள் உட்பட 51 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை