மேலும் செய்திகள்
இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!
4 hour(s) ago | 1
வாஷிங்டன் :'வங்கதேசத்தில் இருந்து வெளியேற அமெரிக்கா தான் காரணம்' என, தப்பி ஓடிய அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்த குற்றச்சாட்டை, அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆக., 5ல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளது.சமீபத்தில், தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஷேக் ஹசீனா கடிதம் எழுதினார். அதில், 'வங்க தேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவை ஒப்படைக்கும்படி அமெரிக்கா வற்புறுத்தியது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. 'மேலும், வங்கதேசத்தில் ராணுவ தளம் அமைக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, என் அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது. 'நாட்டை விட்டு வெளியேற அமெரிக்கா தான் காரணம்' என, குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், ''ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது. ''அவர் ராஜினாமா செய்ததற்கும், நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கும், அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் கிடையாது. வங்கதேசத்தின் நிலைமையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்,'' என்றார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது, நேற்று இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2015ல் வழக்கறிஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, ஷேக் ஹசீனா மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 1