| ADDED : ஜூன் 22, 2024 04:11 AM
காசா: பாலஸ்தீனத்தின் ரபா பகுதியில், இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், 25 பேர் பலியாகினர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடக்கிறது. காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 'ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் தொடரும்' என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தற்போது ரபா நகரில், இஸ்ரேல் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில், ரபா அருகே அமைக்கப்பட்டிருந்த கூடார முகாம்கள் மீது, இஸ்ரேல் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது. இதில், 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.