பாக்., துாதருக்கு அனுமதி மறுப்பு; திருப்பி அனுப்பியது அமெரிக்கா
இஸ்லாமாபாத் : தனிப்பட்ட முறையில் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த பாகிஸ்தானின் துாதருக்கு, அமெரிக்க குடியேற்றத் துறை அனுமதி மறுத்துள்ளது. அவரை திரும்பிச் செல்ல உத்தரவிட்டது.மத்திய ஆசிய நாடான துர்க்மேனிஸ்தானுக்கான பாகிஸ்தான் துாதர் கே.கே.வாகன், தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். தகுந்த விசா மற்றும் ஆவணங்கள் இருந்தபோதும், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.சில காரணங்களைக் காட்டி, அவருக்கு அனுமதி மறுத்த அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை திரும்பிச் செல்லும்படி உத்தரவிட்டனர். ஆனால், எதற்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை.மூத்த அதிகாரியான வாகனுக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்டது, பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவல்களை சேகரித்து, அமெரிக்காவுடன் பேச பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அதிகாரி வாகனை இஸ்லாமாபாதுக்கு வரவழைத்து விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.