வர்சா, போரை சந்தித்து வரும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், “போர்க்களத்தில் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்தில், அந்நாட்டு பிரதமர் டொனால்டு டஸ்க்கை நேற்று சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.உக்ரைன் மீது, ரஷ்யா 2022 பிப்.,ல் துவங்கிய போர் தற்போதும் தொடர்கிறது. இந்நிலையில், அங்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார். கடந்த, 1991ல் சுதந்திரம் பெற்ற பின், உக்ரைனுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை. நாளை அங்கு சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது.போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் உடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களை இருவரும் சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:இந்தியா மற்றும் போலந்து இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சர்வதேச சவால்களை எதிர்கொள்ள, ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை. இதை இரு நாடுகளும் வலியுறுத்துகின்றன.உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் தற்போது நடந்து வரும் மோதல்கள், நம் அனைவருக்கும் கவலை அளிக்க கூடியதாகும். எந்த ஒரு பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது.இந்த மோதல்களால், அப்பாவி மக்கள் உயிரிழப்பது, மனித குலத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால். அதனால், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட, துாதரக மற்றும் அமைதி பேச்சின் வாயிலாகவே தீர்வு காண வேண்டும். உக்ரைனில் அமைதி திரும்ப, அனைத்து நட்பு நாடுகளுடன் இணைந்து, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய, இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ரயில் பயணம் ஏன்?
உக்ரைனில் பிரதமர் மோடி, ஏழு மணி நேரம் மட்டுமே இருக்க உள்ளார். அப்போது, அந்த நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார். இதற்காக, போலந்தில் இருந்து, உக்ரைன் நாட்டின் 'ரயில் போர்ஸ் ஒன்' என்ற சிறப்பு ரயிலில் அவர் பயணம் செய்ய உள்ளார். இதற்காக ஒரு மார்க்கத்தில், 10 மணி நேரம் பயணம் செய்ய உள்ளார். ஏழு மணி நேர அரசு முறை பயணத்துக்காக, 20 மணி நேர ரயில் பயணத்தை மோடி மேற்கொள்ள உள்ளார்.தற்போது, உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ளதால், உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனாலேயே, விமானம் வாயிலாக செல்லாமல், சிறப்பு ரயில் வாயிலாக மோடி செல்கிறார்.
ரயில் பயணம் ஏன்?

அதிபர்!
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்து, சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. அங்கிருந்த ரஷ்ய ராணுவ வீரர்களை போர்க் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் வடகிழக்கு எல்லை பகுதிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சென்றார். ராணுவ அதிகாரிகளை சந்தித்து, அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.ரஷ்யாவுக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்துள்ள அதே நேரத்தில், கிழக்கே டொனஸ்ட்க் பகுதியில், பல பகுதிகளை ரஷ்ய ராணுவத்திடம் இழந்துள்ளது. பல புதிய பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக, ரஷ்ய ராணுவம் நேற்று கூறியுள்ளது.