ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் வாங்க! அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
சிகாகோ : “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற பெருமையை அடைந்திருக்கிறோம்,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சிகாகோ தமிழ் சங்கங்கள் சார்பில் நடந்த, தமிழர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியதாவது:தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் நாடுகளுக்கு சென்றேன். அமெரிக்காவிற்கு லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வரவேற்பு கிடைத்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகம் எப்படியெல்லாம் முன்னேற்றியுள்ளது என, இங்கிருந்து தமிழகத்தில் இருக்கும் உறவுகளிடம் நிச்சயமாக பேசி, கேட்டு இருப்பீர்கள்; செய்திகளை படித்திருப்பீர்கள். சொந்தக்காரர்கள்
எந்த நாட்டுக்கு சென்றாலும், எந்த நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்தாலும், நாட்டிலேயே தமிழகம் எப்படி எல்லாம் முன்னிலை வகிக்கிறது; என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன என்று சொல்லி, தொழில் துவங்க வாருங்கள் என்று நான் அழைப்பு விடுப்பேன். அதனால் தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற பெருமையை அடைந்திருக்கிறோம்.எந்த நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றாலும், என் எண்ணம் எல்லாம், அங்கு வாழும் தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் சந்திக்க வேண்டும் என்று தான் இருக்கும். கீழடி கண்டுபிடிப்புகள் வாயிலாக, 4,000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவு பெற்றும், நாகரிகத்துடனும் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம். அதனால் தான், இந்திய துணை கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என, நான் தொடர்ந்து சொல்கிறேன்.இப்படி, பெருமை, திறமை, ஆற்றல் மற்றும் அன்புக்கு சொந்தக்காரர்களான தமிழர்கள், இன்றைக்கு பல நாடுகளில், பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். அந்த உயர் பொறுப்புகளுக்கு கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களும் வர முடியும் என்று சாத்தியப்படுத்தியது, தமிழகத்தில் உள்ள சமூகநீதியும், அதற்காக பாடுபட்ட தலைவர்களும் தான்.தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், நமக்கு என்று தாய் வீடாக தமிழகம் இருக்கிறது என்ற உணர்வை, நம்பிக்கையை தி.மு.க., அரசு ஏற்படுத்தி வருகிறது. திறமையால் தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் தமிழர்கள்.இங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். உங்களுக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்கு காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி வாழ்க்கை பயணத்தை தொடருங்கள். அருங்காட்சியகம்
ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகத்திற்கு குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர், நம் வரலாற்றின் அடையாளமாக இருக்கும் கீழடி அருங்காட்சியகத்தை பாருங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு, குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.உங்களால் முடிந்த செயல்களை தமிழகத்திற்கு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளிடம், நம் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் இங்கு முதல்வராக இருக்கிறார். அவர் தான் ஸ்டாலின் என்று சொல்லுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.