சரண்டர்! கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர்: முதல்முறையாக ஒப்புக்கொண்டார் ஜஸ்டின் ட்ரூடோ
ஒட்டாவா: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதை, பொதுவெளியில் முதல்முறையாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். ''அவர்கள், கனடாவில் வாழும் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தினரின் பிரதிநிதிகள் அல்ல,'' என, தெரிவித்துள்ளார்.நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை தனியாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கும்படி காலிஸ்தான் பயங்கரவாதிகள் கோரி வருகின்றனர்.இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரத்தில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில், இந்திய துாதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இது, இந்தியா - கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியது. வெறித்தனம்
இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு, டில்லியில் இருந்த கனடா துாதரக அதிகாரிகள் ஆறு பேரை நாட்டை விட்டு வெளியேற்றியது. அதோடு, கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் வர்மாவை திரும்பப் பெற்றது. இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபடும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, தங்கள் மண்ணில் அடைக்கலம் தருவதாக கனடா மீது தொடர்ந்து இந்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.இந்நிலையில், பிராம்டன் நகரத்தில் உள்ள கோவில் முன், காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த 3ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஹிந்துக்களை, அவர்கள் வெறித்தனமாக தாக்கினர். இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.இதனால், கோவில் வளாகத்தில் இந்திய துாதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி தடைபட்டது. சரியான நேரத்தில் போலீசார் வந்து, காலிஸ்தான் ஆதரவாளர்களை விரட்டி அடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.கனடாவில் வசிக்கும் ஹிந்துக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நம் வெளியுறவுத்துறை கவலை தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, டொரன்டோவில் இந்திய துாதரகம் கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த சில நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என கனடா போலீஸ் தெரிவித்ததை தொடர்ந்து, நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதுவரை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இல்லை. அப்படி இருக்கையில், முதல்முறையாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஒட்டாவாவில் நடந்த தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிரதமர் ட்ரூடோ, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், ''கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பெருமளவில் உள்ளனர். ஆனால், அவர்கள் இங்கு வசிக்கும் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தினரின் பிரதிநிதிகள் அல்ல. ''அதே போல, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஆதரவாளர்களும் இங்கு இருக்கின்றனர். அவர்களும் கனடாவில் வசிக்கும் ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல,'' என்றார். பின்னடைவு
கனடாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இதில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கனடாவில் ஹிந்துக்களும், சீக்கியர்களும் பெருவாரியாக வசிக்கின்றனர். இதில் எந்த தரப்பை பகைத்துக் கொண்டாலும் அது தேர்தலில் எதிரொலிக்கும். அதை மனதில் வைத்தே, முதல்முறையாக காலிஸ்தான் விவகாரம் குறித்து வெளிப்படையாக ட்ரூடோ வாய் திறந்து இருப்பதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.