சூடானில் நிலச்சரிவு கிராமமே புதைந்ததில் 1,000 பேர் உயிரிழப்பு
கெய்ரோ:சூடானின் டார்பரில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு கிராமமே மண்ணில் புதைந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆப்ரிக்க நாடான சூடானின் மேற்கு பகுதியான டார்பரில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில், தராசின் என்ற கிராமமே மண்ணில் புதைந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர் குழுவான சூடான் விடுதலை இயக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த மாத இறுதியில் இருந்து பெய்து வரும் கனமழையால் மத்திய டார்பரின் மர்ரா மலைகளில் உள்ள தராசின் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த கிராமம் முழுதும் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். உடல்களை மீட்க உதவுமாறு ஐ.நா., மற்றும் சர்வதேச உதவிக் குழுக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது-. இது ஆப்ரிக்க நாட்டின் சமீபத்திய வரலாற்றில் நிகழ்ந்த மிகக்கொடிய இயற்கை பேரழிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சூடானின் ராணுவத்திற்கும், அதன் துணை ராணுவ படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மர்ரா மலைகள் உள்ளிட்ட டார்பர் பிராந்தியத்தின் பெரும்பகுதிகளை, ஐ.நா., மற்றும் உதவிக்குழுக்கள் அணுக முடியாத நிலை உள்ளது.