முதியோர் இல்லத்தில் தீ 11 பேர் பலி; 30 பேர் காயம்
போஸ்னியா: சரஜெவோ: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 30 பேர் படுகாயமடைந்தனர். போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது தளத்தில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், இங்கு தங்கியிருந்த வயதானவர்களும், உடல்நலம் பாதித்தவர்களும் தாங்களாகவே வெளியேற முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின்படி, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உறுதியான காரணம் தெரியாத நிலையில் விசாரணை நடந்து வருகிறது.