உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி ராக்கெட் தாக்குதல் 274 பேர் பலி; 700 பேர் காயம்; பள்ளிகளுக்கு விடுமுறை

லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி ராக்கெட் தாக்குதல் 274 பேர் பலி; 700 பேர் காயம்; பள்ளிகளுக்கு விடுமுறை

டெல் அவிவ், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய ராக்கெட் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 274 பேர் பலியாகினர்; 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து லெபனானில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேலின் ராணுவ முகாம்களை குறிவைத்து ராக்கெட் தாக்குதலை நடத்தினர்.

எச்சரிக்கை

மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில், ஹமாசுக்கு ஆதரவாக, இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.சமீபத்தில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தங்களுக்குள் ரகசிய தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தி வந்த பேஜர் மற்றும் வாக்கி டாக்கி சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள், பொதுமக்கள் என, 37 பேர் உயிரிழந்தனர். 3,000 பேர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக லெபனான் குற்றம் சாட்டியது. பேஜர்களை வெடிக்கச் செய்ததற்கு பதிலடி தருவோம் என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா அறிவித்திருந்தார்.வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்த இஸ்ரேல், அங்குள்ள பொதுமக்களை உடனடியாக வெளியேறும்படி நேற்று காலை எச்சரித்தது. அடுத்த சில நிமிடங்களில், தெற்கு லெபனானில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் 800க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட 274 பேர் பலியாகினர்; 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குறிப்பாக, பெகா பள்ளத்தாக்கு பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை லெபனான் அரசு உறுதி செய்துள்ளது. கடந்த அக்டோபரில் துவங்கிய மோதலுக்கு பின், லெபனானில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள சமூக வலைதள பதிவில், 'ராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி ஒப்புதலுடன் ஹிஸ்புல்லாவின் 800 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 'வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மேலும் பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தரைவழி தாக்குதல்

இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவ அதிகாரி, 'ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது வான்வழி தாக்குதல் மட்டுமே நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. 'இப்போதைக்கு தரைவழி தாக்குதலுக்கு வாய்ப்பில்லை' என, கூறியுள்ளார். இருதரப்பினருக்குமான மோதலால் போர் பதற்றம் அதிகரித்ததை அடுத்து, லெபனானில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 'இதற்கான கடும் விளைவுகளை இஸ்ரேல் சந்திக்க வேண்டும்' என, லெபனான் அரசு எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா., அமைப்பும் கவலையை வெளிப்படுத்தி உள்ளது. இதற்கிடையே, அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட்ஸ் ஆஸ்டின், இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோயாவ் கலாண்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கள நிலவரம் குறித்து விசாரித்தார். இதற்கிடையே, இஸ்ரேலின் வடக்கு பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து, ஹிஸ்புல்லா அமைப்பினரும் நேற்று சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் இல்லை. இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக, லெபானின் தெற்கு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் பாது காப்பான இடங்களை நோக்கி நேற்று புறப்பட்டனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான அனைத்து உரிமைகளும் இஸ்ரேலுக்கு உள்ளன. அதேநேரத்தில், எந்த ஒரு பிரச்னைக்கும் பேச்சு வாயிலாகவே தீர்வை எட்ட முடியும்.லாயிட்ஸ் ஆஸ்டின்அமெரிக்க ராணுவ அமைச்சர்

விமான சேவைகள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளின் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவையை, சர்வதேச விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. டெல் அவிவ் செல்லும் விமான சேவையை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள 'ஏர் இந்தியா' நிறுவனம், அங்கிருந்து புறப்படும் விமான சேவைகளையும் காலவரையறையின்றி ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 'யுனைடெட் ஏர்லைன்ஸ்' நிறுவனமும் டெல் அவிவ் உடனான விமான சேவையை காலவரையறையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. கே.எல்.எம்., கேத்தே பசிபிக், ஈசி ஜெட் நிறுவனங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான சேவையை ரத்து செய்துள்ளன. சன் எக்ஸ்பிரஸ், லுப்தான்சா, ரியான் ஏர், டெல்டா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள் லெபனான், அம்மான், பெய்ரூட், டெல் அவிவ் போன்ற பகுதிகளுக்கு விமான சேவையை நிறுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !