UPDATED : டிச 30, 2024 12:07 PM | ADDED : டிச 30, 2024 12:06 PM
மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) மெல்போர்னில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன் எடுத்தது.105 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 4வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 228 ரன் எடுத்து, 333 ரன் முன்னிலை பெற்றிருந்தது. 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று (டிச.,30) நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.8 பேர் ஒற்றை இலக்கத்தில் 'அவுட்'
340 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஒருபக்கம் நிலைத்து நிற்க, மறுபுறம் ரோகித் (9), ராகுல் (0), விராட் கோலி (5), ஜடேஜா (2), நிதிஷ் ரெட்டி (1), ஆகாஷ் தீப் (7), பும்ரா (0) என வரிசையாக ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். ரிஷப் பன்ட் 30 ரன்னில் அவுட்டானார். நிலைத்து நின்ற ஜெய்ஸ்வால் 84 ரன்னில் வெளியேறினார். இறுதியில் சிராஜ் 'டக்' அவுட்டாக இந்திய அணி 155 ரன்னுக்கு ஆல்அவுட் ஆகி, 184 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார்.இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் ஆஸி., அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது.