உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இணைய மோசடி வேலை பார்த்த 86 பேர் கம்போடியாவில் சிக்கினர்

இணைய மோசடி வேலை பார்த்த 86 பேர் கம்போடியாவில் சிக்கினர்

புனோம்பென்: கம்போடியாவில் ஆன்லைன் மோசடி மையத்தில் வேலை பார்த்து வந்த, 57 தென்கொரியர்கள், 29 சீனர்களை அந்நாட்டு ஆன்லைன் மோசடி தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்தனர். 'டேட்டா என்ட்ரி' வேலை என்ற பெயரில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், அங்கு அவர்கள் மோசடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. திருமணமாகாதவர்கள் அல்லது விவாகரத்தானவர்களை குறிவைத்து பணம் பறிப்பது, போலி கிரிப்டோகரன்சி முதலீடுகள், தொலைபேசியில் வங்கி ஊழியராக நடித்து மோசடி செய்வது என விதவிதமான இணைய வழி குற்றங்களை செய்யச் சொல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டது. தென்கொரிய மாணவர் ஒருவர் மோசடி மையத்தில் வலுக்கட்டாயமாக வேலை செய்ய வைக்கப்பட்டு இறந்ததால், இதை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்தநிலையில், தென்கொரிய பார்லிமென்ட் குழு உறுப்பினர்கள், கம்போடியாவின் ஆன்லைன் மோசடி தடுப்பு ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து நேரடி ஆய்வுக்குச் சென்றனர். அப்போது, தலைநகர் புனோம்பென்னுக்கு அருகே உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வந்த ஆன்லைன் மோசடி மையத்தில் போலீசார் சோதனை நடத்தி, 86 பேரை பிடித்தனர். இதில், 57 தென் கொரியர்கள், 29 சீனர்கள் அடங்குவர். அவர்களிடம் இருந்து, 126 லேப்டாப்கள், 30 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த வாரம் ஏற்கனவே 64 தென்கொரியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் விருப்பத்துடன் மோசடியில் ஈடுபட்டனரா, கட்டாயப்படுத்தப்பட்டனரா என விசாரணை நடக்கிறது. கம்போடியாவில் கடந்த நான்கு மாதங்களில், 92 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு, 20 நாடுகளைச் சேர்ந்த, 3,455 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ