மேலும் செய்திகள்
அம்பத்துார் சாலையில் மீண்டும் 'மெகா' பள்ளம்
02-Sep-2025
பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக்கில் பிரதான சாலையில், 164 அடி துாரத்துக்கு திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில், வாகனங்கள், சாலையோர மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்; சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது என்பதால், எப்போதும் சாலைகள் பரபரப்பாகவே காணப்படும். போக்குவரத்து நிறுத்தம் இங்குள்ள வஜ்ரா மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு மருத்துவமனையை ஒட்டிய சாம்சென் சாலையில் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. துவக்கத்தில், சாலையின் ஒரு பகுதி கொஞ்சமாக உள்வாங்கிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் முழு சாலையும் சரிந்து ஆழமான பள்ளம் ஏற்பட்டது. சாலையில், 164 அடி நீளத்துக்கு மிகவும் ஆழமான பள்ளம் ஏற்பட்டது. இதில், ஒருசில வாகனங்கள் சிக்கின. சாலையோரம் இருந்த மின்கம்பங்களும் அடுத்தடுத்து முறிந்து உள்ளே விழுந்தன. இதனால், நான்குவழி சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. இந்தப் பள்ளத்தால், சாலையின் அடிப்பகுதியில் சென்ற குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்தன. துரிதமாக செயல்பட்ட மீட்புப் படையினர், பள்ளத்தில் விழுந்தவர்களை உடனடியாக மீட்டனர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மெகா பள்ளம் ஏற்பட்டதை அடுத்து, சாலையை ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குழாயில் அழுத்தம் சாலையை ஒட்டிய வஜ்ரா மருத்துவமனைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், சாலை சரியாகும் வரை, புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சாலையின் அடியில் சென்ற கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, இந்தப் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணியின் காரணமாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, பாங்காக்கில் நாளை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தாய்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
02-Sep-2025