உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்; டிரம்பின் முன்னாள் ஆலோசகர் வெளிப்படை

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்; டிரம்பின் முன்னாள் ஆலோசகர் வெளிப்படை

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதித்துள்ள செயல் இரு தரப்பு உறவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,'' என டிரம்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.இந்திய இறக்குமதி பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ல் 25 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது, அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். அதில் இந்தியா தரப்பில் எந்த நேர்மறை சமிக்ஞையும் தரப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் 25 சதவீத வரியை 50 சதவீதமாக அதிகரித்தார். இதனால் இரு தரப்பு உறவு மோசமடைந்துள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு வருகை தருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடியும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்., 1ல் நடக்கும் அந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதனால் இந்தியா - சீனா உறவு அடுத்தக் கட்டத்துக்கு நகரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு டிரம்ப் 50 சதவீத வரி விதித்திருந்தாலும், இது மிக மோசமான விளைவுகளை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தும். இந்தியா இதற்கு மிகவும் எதிர்மறையாக பதிலடி தந்துள்ளது. சீனாவுக்கு இதேபோன்ற வரி விதிக்கப்படவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த வரி, ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி இந்தியாவை தள்ளக்கூடும், மேலும் அவர்கள் ஒன்றாக இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக பேச்சு நடத்த வாய்ப்புள்ளது. இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து விலக்கி, அமெரிக்காவுடன் நெருக்கமாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆனது. அமெரிக்காவை , டிரம்பின் செயல்கள் ஆபத்தில் ஆழ்த்துகின்றன. இது பெரிய தவறு. இவ்வாறு அவர் கூறினார். 'தன்னை தானே அழித்துக்கொள்கிறார்' டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப், உலகின் மற்ற நாடுகளுக்கு எதிராக வர்த்தகப் போரைத் துவங்கி தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார். இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தது பொருளாதார ரீதியாக முற்றிலும் தவறானது. பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் தங்கள் உத்திகளை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருந்தால், டிரம்பின் இந்த காகிதக் கோட்டை வீழ்ச்சியடையும். அமெரிக்கர்கள் செலவிடுவது நாட்டின் மொத்த உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. எனவே அமெரிக்காவில் பெரும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த வரி நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ