நடுவானில் ஏர்இந்தியா விமானத்தில் கோளாறு; துபாயில் அவசர தரையிறக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
துபாய்: நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வியன்னா-புதுடில்லி ஏர் இந்தியா விமானம் துபாயில் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.இதுபற்றிய விவரம் வருமாறு; ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்து புதுடில்லிக்கு நேற்று ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் AI 154 புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. விமானத்தில் ஆட்டோ பைலட் தொழில் நுட்பம் இயங்கவில்லை. இந்த கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாத காரணத்தால் டில்லி திரும்புவதில் சிக்கல் நிலவியது. அதன் பின்னர் டில்லிக்கு செல்லாமல் துபாய் விமான நிலையத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். பின்னர் உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பிறகு பயணிகள் அனைவரும் அதே விமானத்தில் டில்லி புறப்பட்டனர். இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; அக்.9ம் தேதி வியன்னாவில் இருந்து புதுடில்லிக்கு AI 164 என்ற ட்ரீம் லைனர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, சந்தேகத்துக்குரிய தொழில் நுட்ப கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக அந்த விமானம் துபாய்க்கு திருப்பி விடப்பட்டது.துபாயில் விமானம் மிகுந்த பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது. அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டது. விமானம் தாமதம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கோளாறு நீக்கப்பட்டு, பயணிகளுடன் விமானம் டில்லிக்கு புறப்பட்டது. எதிர்பாராத இந்த சிரமங்களுக்கு வருந்துகிறோம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.