| ADDED : டிச 06, 2024 07:58 AM
நியூயார்க் : அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு நிறுவனமான, 'யுனைடெட் ஹெல்த்கேர்' சி.இ.ஓ., பிரையன் தாம்சன், 50, நேற்று மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் நிறுவனம் யுனைடெட் ஹெல்த் குழுமம். மருத்துவ காப்பீடு சேவை வழங்கும் இந்நிறுவனம், உலகின் முன்னணி 500 நிறுவனங்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் வகிக்கிறது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ., பிரையன் தாம்சன், நியூயார்க்கின் ஹில்டன் ஹோட்டலில் நடக்க இருந்த நிறுவன மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் வந்தார். காரில் இருந்து இறங்கி ஹோட்டலை நோக்கி நடந்த சென்றவரை, பின் தொடர்ந்து வந்த நபர், மறைத்து வந்திருந்த கை துப்பாக்கியால் பின்னாள் இருந்து சுட்டார்.அவர் சரிந்து தரையில் விழுந்தும், விடாமல் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். யுனைடெட் ஹெல்த் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த தாம்சன், கடந்த 2021ல் இந்நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றார்.