கலிதா ஜியா துக்கத் தருணம் மூலம் நாசகாரச் செயல்கள்; விழிப்புடன் இருக்க மக்களுக்கு வங்கதேசம் அறிவுறுத்தல்
டாக்கா: கலிதா ஜியாவின் துக்கத் தருணத்தை யாரேனும் பயன்படுத்தி நாசகாரச் செயல்களில் ஈடுபடலாம். அவர்களை அனுமதிக்காமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவுறுத்தி உள்ளார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக்கட்சி தலைவருமான கலிதா ஜியா(80) உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர். கலிதா ஜியாவின் மறைவை அடுத்து 3 நாட்கள் அரசு துக்க அனுசரிக்கப்படும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; இன்று நமது தேசத்திற்கு ஆழ்ந்த துயரமான நாள். நாட்டின் ஜனநாயக அரசியலின் முன்னணித் தலைவர் இனி நம்மிடையே இல்லை. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், பல கட்சி அரசியல் கலாசாரத்திற்கும், மக்களின் உரிமைகளுக்கும் அவர் ஆற்றிய பங்கு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இந்த இக்கட்டான காலகட்டத்தில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த துக்கத் தருணத்தை யாரும் பயன்படுத்தி ஸ்திரமின்மையை உருவாக்கவோ அல்லது நாசகாரச் செயல்களில் ஈடுபடவோ அனுமதிக்காமல், அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில் நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மூன்று நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில் ஒரு நாள் பொது விடுமுறையையும் நான் அறிவிக்கிறேன். இவ்வாறு முகமது யூனுஸ் கூறி உள்ளார்.