உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆசிய கோப்பை சரவெடி... இந்தியா ரெடி; டி-20 தொடர் ஆரம்பம்

ஆசிய கோப்பை சரவெடி... இந்தியா ரெடி; டி-20 தொடர் ஆரம்பம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது.ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி--20' தொடர் (செப். 9--28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

சீனியர்களுக்கு 'நோ'

இத்தொடரில் சீனியர் வீரர்களின் ஆட்டத்தை காண முடியாது. 'டி-20' அரங்கில் இருந்து இந்தியாவின் கோலி, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, சாகிப் அல் ஹசன் (வங்கம்) ஓய்வு பெற்று விட்டனர். பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ரிஸ்வான், 'நடப்பு சாம்பியன்' இலங்கை அணியில் 'ஆல்-ரவுண்டர்' ஏஞ்சலோ மாத்யூஸ் இடம் பெறவில்லை. அனைத்து அணிகளும் இளம் வீரர்களை நம்பி களமிறங்குகின்றன.

வருகிறார் சுப்மன்

'டி-20' உலக சாம்பியனான இந்திய அணி வலுவாக உள்ளது. மூன்று 'டி-20' அணிகளை களமிறக்கும் அளவுக்கு திறமையான வீரர்கள் உள்ள னர். இதனால் தான் ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் கூட வாய்ப்பு பெற முடியவில்லை. பிரிமியர் தொடர் அனுபவம், நமக்கு சாதகம். சூர்யகுமார் தலைமை பெரும் பலம். 22 'டி--20' போட்டிகளில் 18ல் வெற்றி தேடித்தந்துள்ளார். இதன் வெற்றி சதவீதம் 81.82.'மிஸ்டர் 360 டிகிரி' வீரரான இவர், சூறாவளியாக சுழன்று ரன் சேர்ப்பார். துவக்கத்தில் அபிஷேக் சர்மா, புதிய துணை கேப்டன் சுப்மன் கில் கள மிறங்கலாம். திலக் வர்மா, 'ஆல்- ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், 'பினிஷர்' ரிங்கு சிங் என பேட்டிங்கிற்கு பஞ்சமில்லை. கீப்பர்-பேட்டர் இடத்திற்கு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி காணப்படுகிறது.பும்ரா, அர்ஷ்தீப் சிங் வரவால் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது. சுழலுக்கு வருண் சக்ரவர்த்தி, குல்தீப் உள்ளனர்.

தவிக்கும் பாக்.,

பாகிஸ்தான் அணி சல்மான் அகா தலைமையில் களமிறங்குகிறது. ஷாகீன் ஷா அப்ரிதி, ஹாரிஸ் ராப், ஹசன் அலியின் பந்துவீச்சை அதிகம் சார்ந்துள்ளது. இலங்கை கேப்டன் சரித் அசலங்காவுக்கு குசால் மெண்டிஸ், ஷனகா, பதிரனா, தீக் ஷனா கை கொடுக்கலாம். லிட்டன் தாஸ் தலைமையில் அனுபவம் இல்லாத வங்கதேச அணி களம் காண்கிறது. முஸ்தபிஜுர், டஸ்கின் அகமது கரை சேர்க்க முயற்சிக்கலாம்.

ஆப்கன் அருமை

சவால் கொடுக்க கூடிய அணி யாக ஆப்கானிஸ்தான் உள்ளது. கேப்டன் ரஷித் கான், நுார் அகமது, நபி, ஜத்ரன், ஓமர்சாய், நவீன்-உல்-ஹக், குர்பாஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இளம் கஜன்பார் 19, ரஷித் உள்ளிட்டோர் 'சுழலில்' மிரட்டுவர். இவர்கள் பெரும் பாலான நாள் ஐக்கிய அரபு எமிரேட்சில் பயிற்சி பெறுவதால், இங்குள்ள சூழ்நிலை நன்கு தெரியும்.இந்திய வம்சாவளி வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் போன்ற 'கத்துக்குட்டி' அணிகளும் உள்ளன. இவர்களுக்கு சூர்யகுமாரின் அதிரடி பேட்டிங், பும்ராவின் யார்க்கரை சந்திப்பது புது அனுபவமாக இருக்கும்.

ரூ.2.6 கோடி:

ஆசிய கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசு வழங்கப்படும்.

'ஸ்பான்சர்' இல்லை:

ஆன்லைன் சூதாட்ட தடை காரணமாக, இந்திய கிரிக்கெட் அணி 'டைட்டில் ஸ்பான்சர்' ஒப்பந்தத்தில் இருந்து 'டிரீம் லெவன்' விலகியது. புதிய 'ஸ்பான்சர்' முடிவாகாத நிலையில், ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் 'ஸ்பான்சர்' பெயர் இல்லாத ஜெர்சி அணிந்து விளையாடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை