உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் மீண்டும் வெடித்தது மோதல்; 5 பேர் பலி

பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் மீண்டும் வெடித்தது மோதல்; 5 பேர் பலி

காபூல்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் எனப்படும் பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பினர், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. மாறி மாறி நடத்திக் கொண்ட தாக்குதலில் இதுவரையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, உலக நாடுகளின் தலையீட்டால் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், முழுமையான போர் நிறுத்தம் தொடர்பாக துருக்கியில் இரு தரப்பின் சார்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே எல்லையைத் தாண்டி பரஸ்பரமாக நடத்தப்பட்ட தாக்குதலில், ஆப்கனைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பெண்கள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இருநாடுகளுக்கு மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ஆப்கனின் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறியதாவது; போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்தான்புல்லில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் படைகள் ஸ்பின் போல்டாக் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளன. பேச்சுவார்த்தைக் குழுவை மதித்தும், பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையிலும், முஸ்லிம் அமீரகத்தின் படைகள் இதுவரை எந்த பதிலடியும் கொடுக்கவில்லை, எனக் கூறியிருந்தார். ஆனால், ஆப்கானிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ