ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி இந்தியாவுக்கு வங்கதேச அரசு கடிதம்
டாக்கா : நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி, மத்திய அரசுக்கு அந்நாட்டு அரசு கடிதம் எழுதி உள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, 77, பிரதமர் பதவியை ஆக., 5ல் ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.அவரது இருப்பிடம் குறித்த தகவல் மிகவும் ரகசியமாக உள்ளது.ஷேக் ஹசீனா தப்பியோடியதை அடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக, பல்வேறு வழக்குகளில் கைது வாரன்ட்டுகளை பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதில் இடைக்கால அரசு உறுதியாக உள்ளது.இந்நிலையில், வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹொசைன் நேற்று கூறுகையில், “நீதித் துறை நடவடிக்கைக்காக ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திரும்ப அழைத்து வர விரும்புகிறோம். இது தொடர்பாக இந்திய அரசுக்கு வாய்மொழியாக குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது,” என்றார்.முன்னதாக, வங்கதேச உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் கூறுகையில், “ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கான செயல்முறை தற்போது நடந்து வருகிறது. “நாடு கடத்துவது தொடர்பாக, வங்கதேசம் - இந்தியா இடையே ஒப்பந்தம் ஏற்கனவே இருப்பதால், ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படலாம்,” என்றார்.