உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச ஹிந்து துறவிக்கு 3வது முறையாக ஜாமின் மறுப்பு

வங்கதேச ஹிந்து துறவிக்கு 3வது முறையாக ஜாமின் மறுப்பு

தாக்கா: வங்கதேச போலீசாரால் தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் நேற்று மூன்றாவது முறையாக ஜாமின் மறுத்துள்ளது.வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கடந்த ஆகஸ்ட் 5ல் முடிவுக்கு வந்தது. மாணவர் போராட்டத்தால் அவர் நாட்டை விட்டு தப்பி, நம் நாட்டில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.இதற்கு பின், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடந்தது.ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக, 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனு, சத்தோகிராம் செஷன்ஸ் நீதிமன்றத்தால் ஏற்கனவே இரண்டு முறை மறுக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். 'இது தேச துரோக குற்றம் என்பதால், அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இஸ்கான் அமைப்பு வேதனை

துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட செய்தி குறித்து, கோல்கட்டாவில் உள்ள இஸ்கான் அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் கூறுகையில், “சின்மோய் கிருஷ்ண தாஸின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு புத்தாண்டில் ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது மறுக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. தற்போது இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள ஒரே நம்பிக்கை, சின்மோய் கிருஷ்ண தாஸுக்காக வாதாட வழக்கறிஞர்கள் உள்ளனர் என்பது தான்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை