பொலிவியாவில் 20 ஆண்டு சோஷலிச ஆட்சி முடிந்தது :புதிய அதிபர் தேர்வு
லா பாஸ் : பொலிவியாவில் 20 ஆண்டு கால சோஷலிச அரசை முடிவுக்கு கொண்டு வந்து, ரோட்ரிகோ பாஸ் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 20 ஆண்டுகளாக 'மூவ்மென்ட் டுவெர்ட் சோஷலிசம்' கட்சி ஆட்சியில் இருந்தது. லுாயிஸ் ஆர்ஸ் தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய தேவைகளே கிடைக்காத நிலை ஏற்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், பொலிவியாவில் கடந்த 17ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. முன்னாள் இடதுசாரி அதிபர் ஈவோ மொராலஸ், பாலியல் புகார் காரணமாக போட்டியிட தடை விதிக்கப்பட்டது. மேலும், மொரால சுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதிபராக இருந்த லுாயிஸ் ஆர்ஸ், போட்டியில் இருந்து விலகினார். இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில், அதிக ஓட்டுகள் பெற்று கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ரோட்ரிகோ பாஸ் வெற்றி பெற்றார். அவர், 54 சதவீத ஓட்டுகளுடன் முதலிடம் பெற்றார். பாஸை எதிர்த்து நின்ற முன்னாள் இடைக்கால அதிபர் குய்ரோகா, 45 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்விஅடைந்தார். முன்னாள் இடதுசாரி அதிபர் ஜெய்ம் பாஸ் சமோராவின் மகனான ரோட்ரிகோ பாஸ், தாரிஜாவின் நகர கவுன்சிலராகவும், மேயராகவும் இருந்தவர். பின்னர், 2020ல் எம்.பி., ஆனார்.