உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 8 சிவிங்கி புலிகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் ஒப்படைத்தது போட்ஸ்வானா

8 சிவிங்கி புலிகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் ஒப்படைத்தது போட்ஸ்வானா

காபோரோ: போட்ஸ்வானாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அரசு முறைப் பயணத்தின் போது, 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது.ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவின் காபோரோனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில், 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது. கலாஹரி பாலைவனத்தில் உள்ள கான்சி நகரத்திலிருந்து 8 சிவிங்கி புலிகள் காப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டன.இந்த நிகழ்வில் போட்ஸ்வானாவின் ஜனாதிபதி டூமா கிடியோன் போகோவும் கலந்து கொண்டார். இரு நாடுகளையும் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள், இடமாற்ற செயல்முறை குறித்து ஜனாதிபதிகளுக்கு விளக்கினர். நிகழ்வில் பேசிய ஜனாதிபதி முர்மு, இந்தப் பரிசு போட்ஸ்வானாவின் வனவிலங்கு பாதுகாப்புக்கான வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.பின்னர்,போட்ஸ்வானாவின் ஜனாதிபதி டூமா கிடியோன் போகோ பேசியதாவது: இந்தியாவின் குனோ தேசிய பூங்காவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்த சிவிங்கி புலிகள் சேரும். இது அதன் இனத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கு உதவும். இந்தியாவில் சிவிங்கி புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

35 ஆக உயர்வு

எட்டு சிவிங்கி புலிகளும் போட்ஸ்வானாவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும். பின்னர் வரும் வாரங்களில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இந்த சிவிங்கி புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படும். 2022ம் ஆண்டில் இந்தியா சிவிங்கி புலிகள் இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது.அப்போது எட்டு சிவிங்கி புலிகள் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. 2023ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் வந்தன.கடந்த, 2022ல் துவங்கிய இந்த திட்டத்தின்படி, மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்காவில், தற்போது 27 சிவிங்கி புலிகள் உள்ளன. போட்ஸ்வானாவில் இருந்து வரும் எட்டு சிவிங்கி புலிகள் உடன் இந்தியாவில் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

மவுன அஞ்சலி

காபோரோனில் இந்திய சமூகத்தினர் மத்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: டில்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்பை நான் குறிப்பிட வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அனைவரும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்புமிக்கது

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவும், போட்ஸ்வானாவும் 2026ம் ஆண்டில் 60 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் இந்த தருணம் இன்னும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. போட்ஸ்வானாவில் வணிகம் மற்றும் தொழில் உட்பட பல்வேறு துறைகளில் 10,000 இந்தியர்கள் பணியில் உள்ளனர் என எனக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெருங்கிய கூட்டாளி

இந்தியாவின் பெருமைமிக்க தூதர்களாக இருப்பதற்கு உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்தியாவும், போட்ஸ்வானாவும் வைரத் துறையில் நெருங்கிய கூட்டாளிகள். மேலும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் போன்ற புதிய துறைகளில் நாங்கள் வளர்ச்சி கண்டு வருகிறோம். அன்பான நண்பர்களே, இந்தியா ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்கிறது.

வளர்ச்சி பயணம்

நமது இளம் தலைமுறையினர் வலுவான பொருளாதாரம் மற்றும் புதுமை உணர்வு ஆகியவற்றால் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை நோக்கி பயணித்து வருகின்றனர். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் போன்ற முயற்சிகள் நாட்டை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. நீங்கள் அனைவரும் இந்த வளர்ச்சிப் பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறீர்கள். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை