UPDATED : ஆக 21, 2024 01:53 PM | ADDED : ஆக 21, 2024 01:04 PM
மாட்ரிட்: உலகின் மிக வயதான பெண் என உலக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்பெயினைச் சேர்ந்த பிரான்யாஸ் மொரேரா 117 வயதில் காலமானார். அவர் பிறந்தது முதல் மருத்துவமனைக்கு சென்றதே இல்லை என அவரது மகள் கூறியுள்ளார்.ஸ்பெயினின் கடலோனியாவின் ஒலோட் நகரில் வசித்து வந்தவர் லா மரியா பிரன்யாஸ். இவரது பெற்றோர் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர். சான்பிரான்சிஸ்கோ நகரில் 1907 மார்ச் 4 ல் பிறந்தார். பிறகு 1915ம் ஆண்டு முதலாவது உலகப் போர் நடந்த நிலையில் கடினமான சூழ்நிலையில் பெற்றோருடன் ஸ்பெயின் திரும்பினார். வழியில் அவரது தந்தை உயிரிழக்கவே, சவப்பெட்டியுடன் உடல் கடலில் போடப்பட்டது.பிறகு தாயாருடன் 1931 ல் பார்சிலோனாவுக்கு குடிபெயர்ந்தார். டாக்டரை திருமணம் செய்து கொண்ட பிரன்யாஸ்க்கு 3 குழந்தைகள், 11 பேரக்குழந்தைகள் உள்ளனர். பேரக்குழந்தைகளுக்கும் திருமணம் முடிந்து குழந்தை உள்ளனர். பிரன்யாசின் கணவர் 72 வது வயதில் உயிரிழந்தார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரை உலகின் மூத்த பெண் என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்தது. இவர் 1918 ல் பரவல், முதல் மற்றும் இரண்டாவது உலகப் போர்கள், ஸ்பெயின் உள்நாட்டு கலவரத்தை பார்த்த அவர், 2020ம் ஆண்டு 113வது பிறந்த நாள் கொண்டாடிய பின், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் (ஆக.,19) தூங்கிக் கொண்டிருந்த போது உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். இவரது மகள் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛எனது தாயார் எப்போதும் மருத்துவமனைக்கு சென்றது கிடையாது. எந்த எலும்பையும் உடைத்து கொண்டது கிடையாது. அவர் நலமுடன், எந்த வலியும் வேதனையும் இன்றி வாழ்ந்தார் எனக்கூறியிருந்தார். பிரான்யாஸ் மொரேரோவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவர் காலமானதைத் தொடர்ந்து ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடூகா என்ற 116 வயது என்பவர், உலகின் மிக வயதான பெண் என்ற பெருமை கிடைத்து உள்ளது. இவர் 1908 ம் ஆண்டு மே 23 ல் பிறந்தவர் ஆவார்.