பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு கண்டனம்
வாஷிங்டன்:பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று பஹல்காம் தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட முதன்மை நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய உறுப்பு நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல், புகலிடம் என அனைத்து நிலைகளையும் எதிர்க்கிறோம். பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது, அதில் இரட்டை நிலைப்பாடு கிடையாது. பயங்கரவாதிகளோ, அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களோ யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயலும், அவற்றின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், எப்போது, எங்கு, யாரால் செய்யப்பட்டாலும் அதை நியாயப்படுத்த முடியாது. ஐ.நா.,வால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.