புற்றுநோய் தடுப்பூசி தயார்: ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ: ரஷ்ய விஞ்ஞானிகளால் பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருப்பதாக, அந்நாட்டின் மருந்து மற்றும் உயிரியல் துறையின் தலைவர் வெரோனிகா தெரிவித்தார். ரஷ்ய விஞ்ஞானிகள் 'என்டரோமிக்ஸ்' என்ற பெயரில் புதிய புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் 10வது கிழக்கு பொருளாதார மன்றத்தின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற ரஷ்ய மருத்துவ மற்றும் உயிரியல் முகமையின் தலைவர் வெரோனிகா ஸ்க்வார்ட்சோவா புற்றுநோய் தடுப்பூசி தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: பெருங்குடல் புற்றுநோய் தடுப்பூசி பல ஆண்டு கால ஆராய்ச்சியில் இருந்தது. அவசியமான மருத்துவ முன் ஆய்வுகளுக்கு மட்டும் மூன்று ஆண்டுகள் ஆனது. இந்த ஆய்வுகள், தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் மிகவும் திறமையாக செயல்படுவதை காட்டியுள்ளன. இவ்வாறு கூறினார்.