மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
வாஷிங்டன்: சென்னையில் பிறந்து வளர்ந்து, தற்போது அமெரிக்கா வில் தொழிலதிபராக இருக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணனை, ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ம் தேதி அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து, அவரது தலைமையின் கீழ் அமைய உள்ள அரசுக்கு பல்வேறு துறைகளிலும் ஆலோசனை வழங்கும் அதிகாரிகளை அவர் நியமித்து வருகிறார்.இந்த வரிசையில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து, அரசுக்கு ஆலோசனை வழங்கும் மூத்த ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை அவர் நியமித்து உள்ளார். ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை கிருஷ்ணன் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றியவர். காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்லுாரி யில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பி.டெக்., பட்டம் பெற்றார்.அதன்பின், 2005ல் தன் 21வது வயதில் அமெரிக்கா சென்றார். அங்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியை துவங்கினார். இதைத் தொடர்ந்து, 'டுவிட்டர், யாஹூ, பேஸ்புக், ஸ்நாப்' உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.கடந்த, 2022ல், 'டுவிட்டர்' சமூகவலைதளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் கையகப்படுத்தி, 'எக்ஸ்' என பெயர் மாற்றம் செய்தார். அப்போது, அந்த தளத்தை மறுசீரமைக்கும் பொறுப்பு ஸ்ரீராமிடம் வழங்கப்பட்டது.ஓபன் ஏ.ஐ., - சாட்ஜிபிடி உட்பட பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்களின் தொழில்நுட்ப பிரிவில் இவர் பணியாற்றி உள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த, 'ஆண்ட்ரீசென் ஹாரோவிட்ஸ்' என்ற துணிகர முதலீட்டு நிறுவனத்தின் பங்குதாரராக 2021ல் சேர்ந்தார். அதன் லண்டன் அலுவலகத்துக்கு தலைமை வகித்து வந்த அவர், 2023 நவம்பரில் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.இவருக்கு ஆர்த்தி ராமமூர்த்தி என்ற மனைவி உள்ளார். இருவரும் இணைந்து, 2021 முதல் தொகுத்து வழங்கும், 'தி ஆர்த்தி அண்டு ஸ்ரீராம் ஷோ' என்ற, 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.
26-Nov-2024