உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணு ஆயுத சோதனை செய்யவில்லை; அமெரிக்கா புகாருக்கு சீனா மறுப்பு

அணு ஆயுத சோதனை செய்யவில்லை; அமெரிக்கா புகாருக்கு சீனா மறுப்பு

பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி ஒன்றில், சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:

சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை 'முதலில் பயன்படுத்த மாட்டேன்' என்ற தன் நீண்டகால கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது. எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை முதலில் சீனா பயன்படுத்தப் போவதில்லை என்பதை இதன் வாயிலாக உறுதியளிக்கிறோம். சீனா ஒரு தற்காப்பு அணுசக்தி கொள்கையை கடைப்பிடித்து வருகிறது-. மேலும், அணு ஆயுத சோதனைகளுக்காக தானாக விதித்துக்கொண்ட தடையை பின்பற்றி வருகிறது. இதேபோ ன்று, உலகளாவிய அணு ஆயுத சோதனைகள் மீதான தடையையும், அணு ஆயுத பரவல் தடுப்பு முறையையும் பாதுகாப்பதற்கான அதன் உறுதிமொழிகளை அமெரிக்கா உண்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அணு ஆயுத சோதனைகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்துக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வதை இதற்கு காரணமாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில், அமெரிக்கா முதலில் முழுமையான அணு ஆயுத சோதனையை துவக்கினால், ரஷ்யாவும் பதிலுக்கு சோதனையை துவங்கும் என, ரஷ்யா வெளிப்படையாக எச்சரித்துள்ளது. அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் உறுதிப்பாட்டை அமெரிக்கா மதிக்க வேண்டும் என, தற்போது சீனாவும் வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் இந்த அறிவி ப்பு, உலகளாவிய அணு ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, பெரும்பாலான நாடுகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

150 முறை உலகத்தை அழிக்க முடியும்!

அணு ஆயுத சோதனையை மீண்டும் துவங்க வேண்டியதன் அவசியம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, 1992ம் ஆண்டு முதல் முழுமையான அணு ஆயுத சோதனைகளை தன்னார்வமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய அறிவிப்பு, பல ஆண்டுகளாக அமெரிக்கா கடைப்பிடித்து வந்த தன்னார்வ கட்டுப்பாட்டை மீறுவதற்கான ஒரு பெரிய கொள்கை மாற்றமாக உலக நாடுகள் பார்க்கின்றன. பல உலக நாடுகள் தொடர்ந்து அணு ஆயுதங்களை சோதனை செய்து வருவதால், தங்கள் நாடும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாக, சமீபத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக பூமிக்கடியில் செய்து வருகின்றன. இது குறித்து அந்நாடுகள் வெளிப்படையாக தெரிவிக்காததால், அமெரிக்காவால் இந்த சோதனைகள் குறித்து கண்டிப்பாக அறிய முடியாது. சோதனைகள் நடப்பதற்கான சிறிய அதிர்வுகளை மட்டுமே அமெரிக்காவால் உணர முடிகிறது. பிற நாடுகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால், அமெரிக்காவும் அதே அடிப்படையில் சோதனை செய்வது பொருத்தமாக இருக்கும். தற்போது அமெரிக்கா மட்டுமே சோதனை செய்யாத ஒரே நாடாக உள்ளது. அப்படியிருக்க நான் விரும்பவில்லை. அமெரிக்காவின் ஆயுதங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்த, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். அமெரிக்கா வேறு எந்த ஒரு நாட்டை விடவும் அதிக அணு ஆயுதங்களை கொண்டுள்ளது. உலகத்தை, 150 முறை தகர்க்கும் அளவுக்கு எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Senthoora
நவ 04, 2025 14:21

அமெரிக்கா சொல்வது, பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் வைங்கோ என்று, தான் செய்ததை மற்றவர் செய்தது என்று மறுக்கிறார்கள்.


Rahim
நவ 04, 2025 11:46

அமெரிக்காவே நாங்க அணு ஆயுத சோதனை செய்ய போகிறோம் னு சொல்லும்போது மற்றவர்களும் செய்ய துணிவதில் ஆச்சர்யம் இல்லை.


KOVAIKARAN
நவ 04, 2025 10:29

அது சீனி வெடி அல்ல. உலகையே சீரழிக்கும் வெடி. சமீபத்தில், ரஷ்யா ஒரு மிகவும் அபாயகரமான அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பலிலிருந்து அனுப்பக்கூடிய, அணுசக்தி முகப்பு பொருத்தப்பட்ட ஒரு DRONE வடிவமைத்துள்ளது. இது NUCLEAR DRONE என்று அழைக்கப்படுகிறது. இந்த ட்ரோனின் முகப்பில், அணுசக்திகள் உள்ளன. இந்த ட்ரோன் கடலுக்கு அடியில் வினாடிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதனைக்கொண்டு உலகத்திலுள்ள கடல்களுக்கு அருகிலுள்ள எந்த தேசத்தையும் சில நிமிட நேரத்தில் அழிக்க வல்லது. அதனால் டிரம்ப் அவர்கள் திகைத்துப்போய் உள்ளார் என்பதால்தான், அவரது இந்த அறிக்கை. நீங்கள் முரசொலி மட்டும் படிக்காமல் தினமலரில் வரும் எல்லா செய்திகளையும் ஒரு சில நல்ல ஆங்கில பத்திரிகை செய்திகளையம் படிக்கவேண்டும். அவ்வாறு படித்தால், இதைப்போல கருத்து கூற மாட்டீர்கள்.


Barakat Ali
நவ 04, 2025 12:48

நாரசொலி மட்டும் படித்துவிட்டுக் கருத்திடுவோரே அதிகம் ....


Ramesh Sargam
நவ 04, 2025 10:05

அமெரிக்காவின் புகாரை இந்தக்காதில் வாங்கி அந்தக்காது வழியாக விட்டுவிடவும். சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு குழம்பவேண்டாம். ட்ரம்ப் அதிபராக இருக்கும் வரையில் இப்படி தினம் ஒரு புகார் வரும். கண்டுகொள்ளாதீர்கள்.


அப்பாவி
நவ 04, 2025 08:07

சும்மா.. லட்சுமி வெடி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை