சீனா, பாகிஸ்தான், ஆப்கன் அமைச்சர்கள் ஆலோசனை
காபூல்:உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையே முத்தரப்பு பேச்சு, ஆப்கானிஸ்தானில் நடந்தது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் அரசு நிர்வாகத்தை கைப்பற்றினர். ஆனால், இந்த அரசை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையே, அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் சீனாவும் இணைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் பயணம் செய்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்றுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷ்க் தரும், காபூலுக்கு சென்றார். ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியுடன் இவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக மோதல் ஏற்பட்டிருந்தது. கடந்த மே மாதம், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களையும் அழைத்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சமரசம் ஏற்படுத்தினார். சீனா - பாகிஸ்தான் பொருளாதார பெருவழி திட்டத்தில், ஆப்கானிஸ்தானையும் இணைக்க சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டுடன் சீனா நெருக்கத்தை காட்டி வருகிறது.